குளியல் எனும் பிரார்த்தனை!
தோல்.
தோல்தான் நம் உடலின் மிகப் பெரிய உறுப்பு! பலரும் தோலை ஒரு உறுப்பு என்றே கருதுவதில்லை. நாம் இங்கே தோலை முதன்மைப்படுத்திச் சிறப்பு அந்தஸ்து அளித்துப் பெருமைப்படுத்தக் காரணம் இருக்கிறது. தோல் நம் உடலின் சதையை மூடிக்கொண்டிருக்கும் வெறும் போர்வை மட்டுமல்ல; பல்வேறு விதமான தனித்த இயக்கம் கொண்ட உறுப்பு.
சராசரி அளவுள்ள மனிதனுக்கு ஒன்றரை முதல் இரண்டு சதுர மீட்டர்வரை விரிந்து பரந்துள்ள தோல்தான் புறச் சூழலுக்கும் நமது உடலுக்குமான எல்லைக் காப்பு அரண். பழங்கால அரண்மனைக்கும் வெளிப்புறத்துக்கும் இடையே அகழி வெட்டி வைத்திருப்பார்கள். இப்போதும் வேலூர் அரண்மனை அகழியில் படகுச் சவாரி நடந்துகொண்டிருக்கிறது. அந்தக் கால அகழியில் நீரை நீந்திக் கடந்து செல்ல முடியாதபடிக்கு உள்ளே முதலைகளை விட்டு வைத்திருப்பார்கள்.
அதுபோல, புறச் சூழலில் நிலவும் கெட்ட காற்று, மாசு, நீர் அனைத்தும் உடலினுள் புகுந்துவிடாமல் தடுத்து நிறுத்திவைப்பது தோல்தான். வெளியில் வெப்பம், உடலின் அளவைக் காட்டிலும் கூடுதலாக நிலவும்போது, உள்ளிருக்கும் நீரை, மேல் தோலுக்கு அனுப்பிக் குளிர்வூட்டி உடல் தன்னைத் தற்காத்துக் கொள்கிறது. புறச் சூழலில் குளிரும் மிகையான ஈரப்பதமும் நிலவுமானால் உள்ளிருந்து வெப்பம் மேல் தோலுக்கு வந்து புறக் குளிர் உள்ளே புகுந்துவிடாமல் பாதுகாக்கிறது தோல்.
வெப்பமோ குளிரோ… புறச் சூழலுக்கு ஏற்ற எதிர் சீதோஷ்ணத்தைத் தோலின் மேற்பரப்பு உருவாக்கிக்கொள்கிறது. அடித் தோலில் படர்ந்திருக்கும் கொழுப்பு, மேல் தோலில் உருவாக்கப்பட்ட வெப்பம் அல்லது குளிரைப் புறச் சூழலுக்கு ஏற்ற வகையில் நிலைநிறுத்த உதவுகிறது.
அழுக்கை நீக்கத்தான் குளியலா?
இது தோலின் முதன்மைப் பணி. அது நமது உடலியக்கத்தில் ஆற்றும் பல்வேறு பணிகள் குறித்து அடுத்தடுத்துப் பார்க்கலாம். தோலைப் பராமரிக்க நாம் செய்வது என்ன?
அன்றாடம் குளிக்கிறோம். குளித்தல் என்பது புறத்தில் நம் தோலில் படியும் அழுக்கை நீக்கும் நடவடிக்கை என்றே நம்மில் பலரும் கருதிக்கொண்டிருக்கிறோம். ஏதோ பாத்திரத்தின் பற்றைத் துலக்குவது போல, உடல் நுரைக்க சோப்பு போட்டுத் தேய்க்கிறோம். மேலும் மேலும் நுரைப்பதற்கென்று நைலான் நாறு போட்டும், வெட்டிவேர் நாறு போட்டும் தேய்க்கிறவர்கள் உண்டு. இன்னும் சிலரோ ‘போனமா, குளிச்சோமா, வந்தோமான்னு இருக்கணும்’ என்று சோப்பு வாசனை காட்டுவதற்காகவே குளிப்பதும் உண்டு.
உண்மையில் நமது உடலில் புறத்தில் இருந்து தோல் மீது படியும் அழுக்கைவிட, உள்ளிருந்து வியர்வை வடிவத்திலும் இறந்த செல்கள் வடிவத்திலும் படியும் அழுக்குதான் அதிகம்.
அழுக்கை நீக்குவதற்காகத்தான் குளிப்பது என்றால், புறத் தூசி படியாத வண்ணம் ஏ.சி. காரில் பயணித்து, ஏ.சி. அறையில் அமர்ந்து, உடல் அழுக்காகாத, வியர்வை வடியாத வேலையைச் செய்துவிட்டு, வீட்டுக்கு வந்து உண்டு களைத்து, உறங்கி எழுபவருக்கு மறுநாள் காலையில் குளியல் தேவையில்லை.
கறுத்த எண்ணெய்யும், கெட்டியான மசகு கிரீஸும் படிய வேலை செய்பவர்களும், வியர்வைச் சொட்டச் சொட்ட ஓடியாடி வேலை செய்பவர்களும் மட்டும் குளித்தால் போதுமானது.
குளியல் என்பது சடங்கல்ல
குளிக்காவிட்டால் நம்மில் யாருக்குமே உடலில் முழு அடைப்பு (பந்த்) ஏற்பட்டதுபோல மந்தமாக, ஒவ்வொரு நிமிடமும் தனக்குத் தானே அருவருப்பு உணரும் விதமாக இருக்கிறதே ஏன்?
குளியல் என்பது அழுக்கு நீக்குவதோ சோப்பின் வாசனையை ஏற்றிக்கொள்வதோ அல்ல. மாறாக, உடலின் பழைய வெப்பத்தை நீக்குவது. உடலை, புதிய வெப்பத்துக்கும் புதிய இயக்கத்துக்கும் தயார்படுத்திக்கொள்வது. எனவே, குளியல் என்பது, குறிப்பாக வெப்ப மண்டலப் பிரதேசவாசிகளான நமக்கு, ஒவ்வொரு நாளையும் புதிய உடலோடு புத்துணர்ச்சியுடன் இயங்கச் செய்வதற்கானது.
குளியலைச் சடங்குப்பூர்வமாக ஏதேதோ சிந்தனையோடு அந்த நாளுக்குரிய வேலைகளை மனதுக்குள் திட்டமிடும் அவகாச நடவடிக்கையாகக் கருதாமல், அதற்குரிய முழுப் பொருளையும் உணர்ந்து ஒவ்வொரு சதுர அங்குலத்தின் மீதும் மென்மையாக நீரை ஊற்றி அந்த நாளைச் சிறப்பித்துத் தந்தமைக்கு நன்றி பாராட்டி நிதானமாகத் தேய்த்துக் குளிக்க வேண்டும். குளியல்தான் தோலுக்கு உரம், ஊட்டச் சத்து, புத்தாற்றல் அனைத்தும். குளியல் ஒரு பிரார்த்தனை.
சோப்பைத் தவிர்க்கலாமே!
குளியலுக்கு சோப்புப் பயன்படுத்துகிறோம். நமது வழக்கமான ‘பிராண்ட்’ அல்லாமல் மனதுக்கு உவப்பில்லாத ஒன்றைப் பயன்படுத்தினாலே அன்றைய பொழுது நமக்கு நிறைவாக இருப்பதில்லை.
ரசாயனக் காரத் தன்மை மிகுந்த சோப்பு எதுவும் நம்முடைய தோலுக்கு நன்மை செய்வதில்லை. அது பாரம்பரியம் மிகுந்தது, நம்பிக்கையானது, உண்மையானது என்று எத்தனை உறுதியாகச் சொல்லப்பட்டாலும், ஆக இறுதியாக நுண்ணுணர்வு மிகுந்த தோலின் மென்மையைக் குறைந்த அளவிலேனும் சிதைக்கக் கூடியதுதான். வேம்பு, மஞ்சள், சீயக்காய் என எத்தகைய இயற்கையான மூலப்பொருள் கொண்டது என்று கூறப்பட்டாலும் யார் பரிந்துரை செய்தாலும் தோலின் இயற்கையான பராமரிப்புக்கு ஊறு விளைவிக்கக் கூடியதுதான்.
இயற்கையான முறையில் கிடைக்கும் ஆற்று நீர், அருவி நீர், மழை நீர், கிணற்றில் இருந்து கிடைக்கும் நன்னீர் ஆகிவற்றைக் கொண்டு குளிக்கும்போது கிடைக்கும் நன்மையைக் காட்டிலும் வேறெந்த செயற்கை துணைப் பொருட்களும் நம் தோலுக்கும், தோலின் வாயிலாக உடலுக்கும் கூடுதலான நன்மை செய்வதில்லை என்ற அடிப்படை உண்மையை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
நிதானமான குளியலே நல்லது
ஆண்டுக்கு மும்மாரி பெய்வதே அரிதாகிக்கொண்டு வரும் காலத்தில் இயற்கையான முறையில் கிடைக்கும் நீருக்கு எங்கே போவது? நன்னீரால் தோலைப் பாதுகாப்பது எப்படி?
நமது தோலைப் பராமரிப்பது ஒரு பெரிய உறுப்பைப் பராமரிப்பது மட்டுமே அல்ல. தோலின் வாயிலாக நமது உடலின் வெப்பச் சமநிலையைப் பராமரிக்கவும், தோலின் மூல உறுப்புகளைப் பாதுகாக்கவும் செய்கிறோம். தோலைப் பாதுகாப்பது குளியலில் இருந்தே தொடங்குகிறது.
ரசாயனக் கலப்பில்லாத கைக்கு எட்டும் தொலைவில் கிடைக்கிற இயற்கைப் பராமரிப்பு முறைகள் நிறைய உண்டு. முதலில் குளியல் என்பது அழுக்கு நீக்குதல் மட்டுமே அல்ல. அது குளிர்வித்தலின் மூலமாக உடலுக்குப் புத்துணர்வு தருவது என்ற அடிப்படை உண்மையையும், நிதானமான குளியலே அந்த நாளை நமக்குப் புதிதாக்கித் தரும் என்பதையும் புரிந்துகொண்டால் நம்முடைய அடுத்த குளியலிலேயே கண்கள் கூடுதல் ஒளி பெறும்.
0 comments