1.பிறந்த முதல் சில நாட்களுக்கு சீம்பால் போதுமானதாக இருக்காது
பிறந்த முதல் இரண்டு நாட்களுக்கு உடலில் இருந்து நீர் வெளியேறுவதால், குழந்தையின் எடையில் 5-7 சதவிகிதம் குறையும். நீர்ச்சத்தின் தேவையும் குறைவுதான். எனவே தான் முதல் சில நாட்களில் சுரக்கும் சீம்பாலில் அளவும் குறைவாகவே இருக்கும். குழந்தை எவ்வளவு முறை எவ்வாறு நன்கு பால் சப்புகிறதோ அதனைப் பொறுத்துத்தான் பாலின் சுரப்பு அதிகமாகும். சீம்பால் பல்வேறு வைட்டமின்களும் நோய் எதிர்ப்புத் திறனும் கொண்டது. அளவில் குறைந்தாலும் தரத்திலும் சேயைக்காக்கும் குணத்திலும் சீம்பாலின் பங்கு சிறப்பானது.எனவே தாய் வேறு பால் தர வேண்டாம்.
Add caption |
2.தாய்ப்பால் சுரக்க 3 நாட்களாகும்
நம் நாட்டில் சில தாய்மார்கள், படித்தவர்கள் மற்றும் செவிலியர்களிடையே குழந்தை பிறந்த மூன்று நாட்களுக்குப் பின்தான் குழந்தைக்ககான தாய்ப்பால் சுரக்கும் என்கிற தவறான நம்பிக்கை உள்ளது. இது முற்றிலும் பொய்யான நம்பிக்கை. இதனால் முதலில் சுரக்கும் மஞ்சள் நிற சீம்பாலின் மகிமை தெரியாமல் சுமார் 43 % தாய்மார்கள் அதை தராமல் வீணடிப்பதாக வரும் ஆய்வு முடிவு நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. 2-ம் நாளிலிருந்து தாய்ப்பாலின் சுரப்பு அதிகமாகி, 3-ம் நாளில் 300-400 மில்லியாகவும், 5-ம் நாளில் 500-800 மில்லியாகவும் இருக்கும்.
3.தேன்,சர்க்கரை.குங்குமப்பூ, மோதிரத்தில் தொட்டு வைத்தால் வைப்பவர்களின் குணங்கள் குழந்தைக்கு வரும்
பாரம்பரியமாக குழந்தை பிறந்தவுடன் தேன் சர்க்கரைத்தண்ணீர் குங்குமப்பூ பேரிட்சை கலந்த நீர் போன்றவை தரும் பழக்கம் பெரும்பாலான மக்களிடம் இருக்கிறது. இந்தப் பழக்கத்தின் மூலம் வைப்பவர்களின் குணம் குழந்தைக்கும் வரும் என்பது பகுத்தறிவிற்கு முரணான அறிவியல் சாராத கட்டுக்கதையே தவிர வேறொன்றுமில்லை. தாய்ப்பாலினை குழந்தை பிறந்த ஒருமணி நேரத்திற்குள் தருவது முதல் தடுப்பு மருந்தாக பயன் தரும். மேலே குறிப்பிட்டவைகளைத் தந்தால் குழந்தையின் பசி மட்டுப்பட்டு சப்புதல் குறைந்து பால் சுரப்பும் குறையும் அபாயம் உண்டு. நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பும் அதிகமாகும்.
4.தாய்ப்பால் முழுதும் சுரக்க நாளாவதால் தாய்ப்பாலிற்கு பதிலாக திரவ உணவுகள் குழந்தைக்கு தரலாம்
தாய்ப்பாலூட்டுவதற்கு முன் குழந்தைக்கு தரப்படும் விலங்கின் பால், சர்க்கரைத் தண்ணீர், பால்பவுடர் முதலியவை பாலூட்டுவதற்கு முன் தரப்படும் பதிலிகள். இவைகளைத் தருவது குழந்தைக்கு வயிற்றுப்போக்குமுதலிய நோய்களையும் ஒவ்வாமையின்மையும் ஏற்படுத்தும் அபாயம் உண்டு. முதலில் குறிப்பிட்டதினைப் போல் தாய்ப்பால் சுரப்பினைக் குறைக்கும் அபாயம் உள்ளது.
5.தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் எல்லாம் மற்ற பால்களிலும் உள்ளது!!!அதற்கு என வேறு உபயோகம் இல்லை
தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளை பிற்காலத்தில் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், நரம்புத் திசுக்கள் அழிவு, ரத்தக் குழாய்கள் அடைத்து இருதய நோய், நிணநீர் புற்று ஆகிய நோய்கள் தாக்குவது குறைவு. தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளை நிமோனியா, வயிற்றுப் போக்கு போன்ற நோய்களும் குறைவாகப் பாதிக்கின்றன.. ஜியார்டியா மற்றும் அமீபா போன்ற கிருமிகளைக் கொல்ல வல்ல கிருமி நாசினியாகவும் தாய்ப்பால் செயல்படுகிறது.
இயற்கையே திட்டமிட்டு தினம்தோறும் குழந்தையின் தேவைக்கு ஏற்ப தயாரிக்கும் உணவுதான் தாய்ப்பால்.. தாய்ப்பால் தரும் பழக்கமானது தாய்மார்களுக்கு மார்பகப் புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய்கள் வரும் அபாயத்தையும் பெருமளவு குறைக்கிறது.
குழந்தைகளின் பிரத்யேகமான ஊட்டசத்துத் தேவைகளுக்கு ஏற்ப தாய்ப்பால் மாதத்துக்கு மாதம், நாளுக்கு நாள், நேரத்துக்கு நேரம் மாறுகிறது. மூளை வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்துகள், முக்கிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் பல்வேறு சத்துக்களும் தாய்பாலில்தான் உள்ளன.. குழந்தைகளின் உடல் ,எதை எதிர் பார்க்கிறதோ, அதை மட்டுமே தருகிற ஆற்றல் தாய்ப்பாலுக்கு மட்டுமே உண்டு. மற்ற பால்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை சிதைத்து விடுகின்றன.
குறை மாதக் குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்ப தாய்ப்பாலும் தன்னை மாற்றிக் கொள்கிறது என்பது இயற்கையின் இன்னுமொரு ரகசியம். அந்தந்த கால கட்டத்தில் குழந்தைகளுக்கு எந்தெந்த சத்துகள் தேவையோ அவற்றை தாய்ப்பால் வழங்குகிறது.
6.ஒவ்வொரு மார்பகத்திலும் தேவையான நேரம் 5/10/15/20 நிமிடம் (அ) அதிக நேரம் பாலூட்ட வேண்டும்!
தேவையான அளவு உற்பத்தியாவதற்கும் குழந்தையின் சரியான வளர்ச்சிக்கும் அடிக்கடி மற்றும் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் பாலூட்ட வேண்டும்!. இரவு பகல் இரண்டு நேரங்களிலும் பாலூட்டுதல் ’தேவைக்கேற்ப பாலூட்டுதல்’ என அழைக்கப்படுகிறது.ஒவ்வொரு முறையும் பாலூட்;டும் தடவைகளும்மாறுபடும்..பசித்தேவைக்கேற்ப பாலூட்டும் குழந்தைக்கு நேர்முக வளர்ச்சிக்கு தேவையான பால் கிடைத்துவிடும். ஒவ்வொரு முறையும் 60-72 சதவீதம் பாலினை மட்டும் அருந்தும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. பால் அருந்திய பின்னரும் மார்பகத்தில மீதமிருக்கும் பால்,குழந்தை பசி ஆறுவதால் தான் பாலூட்டுதலை நிறுத்துகின்றது என்பதினை உறுதிப்படுத்துகிறது. பால் போதாததால் என்ற நம்பிக்கை தவறானது என்பது இதிலிருந்து தெரிகிறது. குறைந்தது 20 நிமிடம் சரியான முறையில் 8-10 முறை தரவும். அடிக்கடி பாலூட்ட அழுதால், பாலூட்டும் நிலையையும் குழந்தையின் சப்புதலையும் கவனிக்க வேண்டும்.
7. நிறைய பெண்களுக்கு தேவையான பால் சுரப்பதில்லை
தாய்மார்களின் முதல் 3 நாட்களின் கவலை சரியாக பால் சுரப்பதில்லை என்பது தான். சிறிய மார்பு, குடிக்கும் போது மார்பு கடினமாக இல்லாமல் மிருதுவாக இருத்தல், முந்தைய குழந்தைக்கும் பால் போதவில்லை மற்றும் உறவினர்களுக்கும் சரியாக பால் சுரக்கவில்லை என்பது வழக்கமான தவறான நம்பிக்கைகள்.
உண்மையிலேயே அந்த குழந்தைக்கு தேவையான பால் கிடைத்து நல்ல தேவையான எடை அதிகரித்து வந்திருக்கும். நிறைய நேரங்களில் பால் அருந்துவதில் தான் பிரச்சனை இருக்கும். குழந்தை நிறைய பால் குடிக்கவில்லை என்றால் மார்பில் பால் காலியாகாது சப்பிக் குடிக்கவில்லை என்றால் பால் வெளி வராது. அதனால் பால் உற்பத்தி குறையும்.
மேலும் குழந்தையிடம் பின்வரும் செயல்கள் இருந்தால் பால் குறைவு என தாய் தவறாக எண்ண வாய்ப்புகள் உண்டு. அடிக்கடி தாய்ப்பால் குடிப்பது, தாய்ப்பால் குடித்தவுடன் தூங்காமல் இருப்பது,பின் பாட்டில் பால் கொடுத்தால் குடிப்பது, கை சப்புவது, அடிக்கடி எழுவது, நினைத்த போதெல்லாம் பால் குடிப்பது இவைகளுக்கு முக்கிய காரணமாக குழந்தை , சரியாக கவ்விப்பாலருந்தாது உள்ளது. ஆனால் குழந்தையின் சரியான எடையும், உடல் வளர்ச்சியும், தாய் தவறாக எண்ணியுள்ளாள் என்பதினை நமக்கு உணர்த்தி விடுகின்றன.
8.புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும்?
புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகள் பால் ஒவ்வாமை காரணமாக பேதி அலர்ஜி , வாந்தி உள்ளிட்ட சில பல சிக்கல்களை எதிர்கொள்கின்றன. மூளை வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகிற ஒமேகா 3 என்கிற பொருள் தாய்ப்பாலில் மட்டுமே இருக்கிறது. பவுடர்,மாட்டுபால்கள் குழந்தைகளை புத்திசாலியாகவும் புஷ்டியாகவும் மாற்றும் என்கிற விளம்பரங்களைப் பார்த்து ஏமாற வேண்டாம்.இன்சுலின் குறை சார்ந்த நீரிழிவு நோய்,-முதல் வகை சர்க்கரை நோய் ,கணையத்தில் உள்ள ஐலெட் செல்கள் சிதைவதால் உண்டாகின்றது. இத்தகைய சிதைவை ஊக்குவிக்கும் எதிர்ப்புரதம் உண்டாகபசும் பால் ,பவுடர் பாலில் உள்ள புரதம் காரணம் என்று அறிவியல் உலகம் எச்சரிக்கை செய்கிறது.
தாய்ப்பாலில் உள்ள உப்புச் சத்துக்களின் அடர்த்தி குறைவு. அடைக்கப்பட்ட பவுடர் மற்றும் விலங்குகளின் பாலில் இந்த உப்புச் சத்து அதிகம் இருக்கும். இந்த உப்புகளைச் வெளியேற்ற சிறு வயதிலேயே குழந்தையின் சிறு நீரகம் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளும். அதிக வேலைப் பளு குழந்தைகளின் சிறுநீரகங்களுக்கு ஏற்படுகிறது.
9.தாய்ப்பால் ஊட்டும்முன் பால் வருகிறதா என எடுத்துவிட்டு பார்க்க வேண்டும்?
தாயானவள் உணர்வுப்பூர்வமாக குழந்தையை எடுத்து, தன் உடலோடு அணைத்து பாலுõட்டும் போது, புரோலோக்டின்,ஆக்சிடோசின் என்கிற இரண்டு இயங்குநீர்கள் தாயின் உடலில் உற்பத்தியாகின்றன. இந்த இயங்கு நீர்கள் மற்றும் குழந்தையின் சப்புதல் மூலம் வரும் தூண்டல்.தாயின் தன்னம்பிக்கை, குழந்தையின் குரல், குழந்தையின் அருகாமை, இவைகள் தான் தாய்பாலைத் தீர்மானிக்க கூடிய சக்திகளாக இருக்கின்றன. பால் சுரக்கும் என்கிற நம்பிக்கையை தாய் இழக்கும் போதும்,சந்தேகம், கவலை, வலி மற்றும் மனக்குழப்பம் அடையும் நிலையிலும் பால் சுரப்பது பாதிக்கப்படும்.
கர்ப்ப காலத்திலேயே, மார்பகங்கள் தாய்பால் ஊட்டுவதற்கு தயார்படுத்தப்படுகின்றன.. மான்ட்கோமரி எண்ணெய்ச் சுரப்பிகள், காம்புகளை மென்மையாக்குகின்றன. அதனால், காம்புகளை சோப்புப் போட்டு கழுவக் கூடாது. காம்புகள் மீது மருந்துகள் மற்றும் களிம்புகளைத் தடவுதல் தவறாகும். மார்புக் காம்புகளை அழுத்தி சீம்பாலை எடுக்கக் கூடாது. இதனால் தொற்றுகள் ஏற்படும்.
குழந்தைகளின் தேவை மற்றும் அது சரியாக சப்புவதைப் பொருத்தே தாய்ப்பாலானது சுரக்கிறது. குழந்தை சரியாகச் சப்பும் போது அதற்குத் தேவையான பால் தாயிடம் சுரக்கிறது
10.தாய் குழந்தைக்கு உட்கார்ந்த நிலையில் மட்டுமே பாலூட்ட வேண்டும்
தனக்கு வசதியான எந்த நிலையிலும் தாய் பாலூட்டலாம். அடிக்கடி பாலூட்ட வேண்டி இருப்பதால் இங்க தாய் சேய் இருவரின் வசதியும் முக்கியம். படுத்தபடி, தரை, சோபா, நாற்காலிகளில் உட்கார்ந்தபடி, சுவரில் சாய்ந்தபடி என தன் வசதிக்கு ஏற்ப பால் ஊட்டலாம்
இந்திய முறை: தாய் சம்மணமிட்டு அமர்ந்து குழந்தையின் முதுகை ஒரு கையால் தாங்கி….. குழந்தையின் தலை வைக்கும் தொடையை உயர்த்தி குழந்தையை அரவணைக்க வேண்டும்.
தொட்டில் நிலை: தாய் வசதியாக அமர்ந்து கையால் தொட்டில் போல் குழந்தையின் உடலைத் தாங்கிப் பாலூட்டலாம். முன் கையால் குழந்தையின் தலையைத் தாங்கலாம். மற்றொரு கை அல்லது தலையணை பயன்படுத்தி குழந்தையை வசதியாக சிரமமின்றித் தாங்க உதவலாம்.
மாற்றுத் தொட்டில் நிலை: உட்கார்ந்து குழந்தையின் தலை மற்றும் உடலை இரு கைகளாலும் அரவணைத்துப் பாலூட்டுதல்.
கால்பந்தைத் தாங்கும் நிலை: குழந்தையின் கால்கள் தாயின் முதுகுப் பக்கம் இருக்க, அதன் நெஞ்சு வயிறு எல்லாம் தாயின் உடலோடு ஒட்டி இருக்கும்படி தாலையணை வைத்து பால் கொடுக்கும் முறை இது. இரட்டைக் குழந்தைகளுக்கு இப்படிப் பால் கொடுப்பது எளிதாக இருக்கும். காம்பு வெடிப்பு மற்றும் புண் உண்டாகும் சூழலில் இந்த நிலையில் பாலூட்டினால் ஆறுவது எளிதாக இருக்கும்
ஒருக்களித்துப் படுத்த நிலை: தாய் ஒருபக்கமாய்ப் படுத்து குழந்தையை தன் பக்கமாக அணைத்துப் பாலூட்டலாம். குழந்தையின் தலை மற்றும் கழுத்து கை அல்லது தலையணையைக் கொண்டு தாங்கலாம். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு இது பாலுõட்ட வசதியான நிலை. இரவு நேரங்களில் இவ்வாறு பாலூட்டுவது தாயின் சிரமத்தைக் குறைக்கும்.
மல்லாந்து படுத்த நிலை: தாய் மல்லாந்து படுத்தால் குழந்தையின் முகம் குப்புறமாக, தாயின் நெஞ்சோடு இருக்கும். ஒரு கையால் குழந்தையின் தலையைத் தாயின் மார்போடு சேர்த்தணைத்துப் பிடிக்கலாம். மற்றொரு கை விரல்களால் முலைக்காம்பு குழந்தையின் வாயில் சரியான அளவு செல்ல உதவ வேண்டும்.
பால் ஊட்டும் போது குழந்தையின் தலை சற்றே உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும், பால் அருந்தும் போது விழித்திருக்க வேண்டும், தாய் சேயின் இணைப்பு சரியாக இருக்க வேண்டும்.சரியான முறையில் மார்பு குழந்தையின் வாயில் பிணைக்கப்பட்டால் குழந்தையின் மூக்கும் கீழ்த்தாடையும் தாயின் மார்போடு இருக்கும், உதடுகள் மீனின் வாய் போல் இருக்கும், இடைவெளி விட்டு விட்டு அழாமல் சப்பும். இந்த நிலையில் மார்பில் வலி ஏற்படாது. குழந்தை விழுங்கும் சப்தம் கேட்கும்.
11.சிசேரியன் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு பாலூட்டுவது முடியாது
சிசேரியன் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பெற்றபின் ,முதல் 1 மணி நேரத்திற்குள் தான் பாலூட்டுவது சிறிது சிரமமானது. எந்தமுறையில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டது என்பதனை பொறுத்துத்தான் மயக்கம் தெளிந்து, பாலூட்டுவது குறித்து முடிவெடுக்க முடியும். எபிடியுரல் மயக்க மருந்து தந்திருந்தால் சீக்கிரமாகவே சுயநினைவு பெற்று, பாலூட்ட ஆரம்பிக்க இயலும். முதல் 24 மணிநேரத்தில் தாய் படுக்கையில் படுத்தவாறே பாலூட்டலாம். திரும்பக் கூட வேண்டாம். உடனிருப்பவர் குழந்தையின் தலையினை பிடித்துக்கொண்டு மார்பின் குறுக்கவோ, ஒரு புறத்திலிருந்து தோள்பட்டைக்கு குறுக்கவோ தரலாம். பின்னர் ஒருக்களித்து படுக்கையில் படுத்து ,தர இயலும் தலையணை வைத்து சாய்ந்து உட்கார்ந்தும் பாலூட்டலாம். தையல் போட்ட இடத்தில் அழுத்தம் தராமல் பாலூட்டுவது தான் முக்கியம்.
12. குழந்தை சிறிதுநேரம்குடித்துவிட்டு தூங்கி விட்டால் மறுபடியும் தர வேண்டியதில்லை
முதலில் சுரக்கும் பாலில் நீர்ச்சத்து அதிகமாகவும், கடைசியில் சுரக்கும் பாலில் கொழுப்புச் சத்து அதிகமாகவும் இருக்கும். சில குழந்தைகள் முதலில் சுரக்கும் பாலைமட்டும் குடித்தவுடன் உறங்கத் துவங்கும். இந்த நேரத்தில் குழந்தைகளை சீண்டி உறக்கம் கலைத்து ,பின் பாலையும் குடிக்கச் செய்ய வேண்டும்.
இரட்டைக் குழந்தைகளை இரு மார்பகங்களிலும் ஒரே நேரத்தில் பால் அருந்த விடுவதன் மூலம் பால் சுரப்பதை மேலும் அதிகரிக்கச் செய்ய முடியும். குழந்தை சப்புவதற்கேற்பத்தான் பால் ஊறும் .எனவே தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பதன் மூலம்தான் உற்பத்தி அதிரித்து குழந்தையின் தேவையினை பூர்த்தி செய்ய முடியும்.
மார்புக் காம்பு வெடிப்பு மற்றும் புண் உள்ளிட்ட ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர மறுக்கக் கூடாது மார்புக் காம்பு வெடிப்பு மற்றும் புண் இருப்பின்,.சரியாக சப்புதல்,அடிக்கடி பால் தருதல், பின்பால் தடவுதல் இவைகளை குணப்படுத்தும்.
13. தாய்ப்பாலோடு அவ்வப்போது புட்டிப் பாலும் கொடுத்துப் பழக்கினால் தவறில்லை
ஒரு குழந்தைக்கு தாய்ப்பாலோடு அவ்வப்போது புட்டிப் பாலும் கொடுத்துப் பழக்கினால் அந்தக் குழந்தை மீண்டும் தாய்ப்பால் குடிப்பதைத் தவிர்க்கப் பார்க்கும் காரணம், புட்டிப் பால் குடிப்பது எளிமையானது. புட்டியினை, கவிழ்க்கும் போது தானாகவே சொட்டு சொட்டாக பால் விழும். தாய்ப்பால் குடிப்பது அப்படியல்ல; குழந்தை தாயின் மார்பினை நன்கு கவ்வி சப்பும் போதுதான் தாய்ப்பால் வரும். வெளிப்பால்களில் சர்க்கரை சேர்க்கப்படுவதால் அது தாயப்பாலை விட சுவையாகவும் இருக்கும் இரண்டிலும் இருக்கிற இத்தகைய வேறுபாடுகளாலும் புட்டிப்பால் குடிப்பது எளிதானது என்பதாலும் குழந்தை தாய்ப்பாலைத் தவிர்க்கப் பார்க்கும்.. இந்த நிலை நீடிக்கும் போது தாய்ப்பால் சுரப்பது குறைந்து போகிறது. ஆகவேதான் எந்த காரணத்தாலும் 6 மாதங்கள் வரையிலும் தாய்பாலைத் தவிர வேறு எந்த உணவையும் குழந்தைகளுக்குத் தர வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தாய்க்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்ட போதும் தாய்ப்பாலைக் கொடுக்கலாம், காரணம் அந்த நேரத்தில் தாயின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தோன்றும் அது குழந்தைக்கு போதுமானதாக இருக்கும்.குழந்தை நோய்க் காரணங்களாலும், தாய்மார்கள் வேலைக்குச் செல்லும் சூழலிலும் தாய்பாலைக் கறந்து எடுத்து வைத்து குழந்தைக்கு ஊட்டும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும்
14.வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் ,தாய்ப்பாலை கறந்து வைத்து தரக்கூடாது
குழந்தையின் நோய்க்காரணங்களாலும், தாய்மார்கள் வேலைக்குச் செல்லும் சூழலிலும் தாய்ப்பாலைக் கறந்து எடுத்து வைத்து குழந்தைக்கு ஊட்டும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.
வசதியாக உட்கார்ந்து கொள்ளவும்.தேவைப்பட்டால் இரு கைகளாலும் மார்பகத்தை நெஞ்சில் இருந்து நீவி விடவும்.. கட்டை விரலை காம்புக்கு மேல் கருப்பு பாகத்திலும் மற்ற விரல்களை காம்புக்குக் கீழும் வைக்கவும்.கட்டை விரலும் பிற விரல்களும் ஒன்றுக் கொண்று இணையாக இருக்க வேண்டும்.கட்டை விரல்களையும் பிற விரல்களையும் உள்நோக்கி அழுத்த வேண்டும்.ஒவ்வொரு மார்பகத்தில் இருந்தும் குறைந்தது 5 நிமிடமாவது பால் சேமிக்க வேண்டும்.கட்டை விரல் மற்றும் மற்ற விரல்களை சுற்றிச் சுற்றி அழுத்துவதன் மூலம் அனைத்துப் பால் பைகளில் (லேக்டிபெராஸ்) இருந்தும் பாலை வெளியாக்க முடியும்.
சாதாரண நிலையில் 8 மணி நேரமும், குளிர்சாதனப் பெட்டியில் 24 மணி நேரமும் இந்தப் பால் கெடாமல் இருக்கும். இப்படிக் கறந்த பாலையும் டம்ளர் ,கறண்டி மூலம் ஊட்டவும்.
15.குழந்தைக்குப் பாலூட்டுவதை நிறுத்தியிருந்த தாய் மீண்டும் பாலூட்டமுடியாது
தாய் தன் குழந்தைக்குப் பாலூட்டுவதை நிறுத்தியிருந்தாலும் தாய் நினைத்தால் மீண்டும் பாலூட்டும் திறனைப் பெற முடியும். குழந்தையை நம்பிக்கையோடு அடிக்கடி சப்ப விட்டால் பால் ஊறும். குழந்தைப் பெறாத தாய்மார்கள் கூட ஆர்வத்துடன் சப்ப விடுவதன் மூலம் பால் சுரக்கும். இதை தூண்டிப் பால் ஊட்டுதல் என்கிறோம்.
தாயின் ஆர்வம் மற்றும் நம்பிக்கையை வளர்க்க வேண்டும்.தாய்க்கு போதிய ஓய்வு அளிக்க வேண்டும். அடிக்கடி பேசி அவளின் நம்பிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.அதிகம் பால் சுரக்க வைக்கும் உணவுகளை (பூண்டு, சிறு கீரை, வெந்தயம்) வீட்டில் சமைக்க வேண்டும்.ஊட்டச் சத்துள்ள உணவுகளை தாய்க்குத் தர வேண்டும்.அடிக்கடி குழந்தையை மார்பில் பால் சப்ப விட வேண்டும்.சரியான முறையில் சப்புவதற்கு குழந்தைக்கு மறு பயிற்சி அளிக்க வேண்டும். இரவும் பகலும் தாயும் சேயும் ஒன்றாக இருக்க வேண்டும்.பாட்டில் பயன்படுத்தாமல் பாலாடை அல்லது தேக்கரண்டி பயன்படுத்த வேண்டும்.தாய் பாட்டிலில் பாலுõட்ட வேண்டும் என்கிற நிலை இருந்தால் மருத்துவமனையில் சேர்த்து பாலூட்ட வழி செய்ய வேண்டும். படிப்படியாக மாற்றுப் பாலை நிறுத்த வேண்டும்.குழந்தையின் எடை கூடுதல், சிறுநீர் கழித்தல் போன்றவற்றை கவனிக்கவும்.பால் சுரக்கக் கொடுக்கும் ஊசிகள் மற்றும் மருந்துகளால் பயன் குறைவு. இக்கட்டான சூழலில் வேண்டுமெனில் பயன்படுத்தலாம்.
16.உள்வாங்கிய மார்புக் காம்பு இருந்தால் பாலூட்ட நிப்பிள் ஷீல்ட் தேவை!நேரடியாக பால் தர முடியாது
பால் குடிப்பதற்கு முக்கியதடைகளுள் முதன்மையனது உள்வாங்கிய மார்புக் காம்பு. மார்புக் காம்புகளில் சாதாரணமானது, தட்டையானது, நீளமானது, உள்ளிளுக்கப்பட்டது என்று நான்கு வகை உண்டு. உள்ளிளுக்கப்பட்ட மார்புக் காம்புகளை அதைச் சுற்றியள்ள கருவளையம் போன்ற ஏரியோலா பகுதியை அழுத்தி மார்புக் காம்புகள் வெளியே வருகிறதா என்று பார்க்க வேண்டும்.அப்படி வரவில்லை என்றாலும் மருத்துவர்களின் ஆலோசனையுடன் சிரிஞ்ச் மூலம் உரிய நேரத்தில் இவற்றை எளிதாக வெளியே எடுக்க முடியும்.
25 மில்லி சிரிஞ்சினை எடுத்து அதன் வாய்ப்பகுதினை பிசிறு இல்லாமல் , வெட்டி விட வேண்டும். பின்னர் பிஸ்டனை வெளியே எடுத்து திருப்பி வெட்டி எடுத்த முன் பகுதி வழியாக உள்ளே சொருகவும்.,மார்புக்காம்பு சிரிஞ்ச் உள்ளே இருக்கும்படி வைத்து , மெதுவாக பிஸ்டனை இழுக்கவும். இது போல் ஒவ்வெருமுறையும் ,பால்தரும் முன்செய்தால் மார்க்காம்பு வெளியே வந்து விடும். நிரந்தரமாக நேரடியாகப் பால் தர இயலும்.
- டாக்டர் இர.செல்வன், குழந்தைகள் நல மருத்துவ நிபுணர், ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர், தாய்ப்பால் ஊக்குவிப்பார் கூட்டமைப்பு, ஈரோடு. தொடர்புக்கு - selvanr4@gmail.com
Thanks to : https://www.dinamani.com/health/2016/aug/01/தாய்ப்பால்-தொடர்பான-’தவறான--2550825.html