நோய் எதிர்ப்பு சக்தி என்பது இயற்கை நமக்குக் கொடுத்த அற்புத வரம்
By sivaprakashThiru - July 07, 2020
*நோய் எதிர்ப்பு சக்தி என்பது இயற்கை நமக்குக் கொடுத்த அற்புத வரம்*. ஒரு நோய்க் கிருமி நம் உடலில் நுழைந்ததும் நம் நோய் எதிர்ப்பு மண்டலம் விழிப்படைந்து அதனை நீக்குவதற்காக உழைக்கத் தொடங்குகிறது. நோயுடனான இந்தப் போரில் நாம் வெல்ல, நம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சிறப்பாகப் பராமரிக்க வேண்டிய தேவை உள்ளது.
நாம் உண்ணும் உணவுகளின் கழிவுப் பொருட்கள், சுவாசிக்கும் காற்றின் கழிவு ஆகியவை நம் உடலில் இருக்கும். என்ன தான் வியர்வை, சிறுநீர், மலம் வழியாக இவை வெளியேறினாலும் மிகச் சிறிய அளவில் இந்தக் கழிவுகள் இருக்கவே செய்யும். இவற்றை முழுமையாகச் சுத்தம் செய்ய வேண்டியது இந்த கொரோனா நாட்களில் மிகவும் அவசியம். நம் உடலுக்கு அடிப்படையான ஒவ்வொரு உறுப்புக்குமான நச்சு நீக்கச் சிகிச்சையைச் செய்து கொண்டாலே நம் உடல் எந்தக் கிருமிக்கு எதிராகப் போராடவும் தயாராகிவிடும்.
*ரத்தம்*
ரத்தம் தான் நம் உடல் முழுதும் பாயும் ஜீவநதி. காற்றில் உள்ள ஆக்சிஜன் முதல் உண்ணும் உணவுப் பொருட்களில் உள்ள சத்துகள் வரையிலும் அனைத்தையும் கொண்டு போய் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் சேர்ப்பது ரத்தம் தான். இது மட்டும் அல்ல உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளைச் சுமந்து சென்று வெளியேற்றுவதிலும் ரத்தம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ரத்தத்தை சுத்தமாக்க இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களையும், நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளையும் கேரட், பீட்ரூட் போன்ற கரோடினாய்டு நிறைந்த காய்கறிகளையும், சிவப்பு வண்ணப் பழங்களையும் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தினசரி 2-3 லிட்டர் தண்ணீர் பருகுவது ரத்தத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருக்கும் ஒரு வழிமுறை.
பசலைக்கீரை, அரைக்கீரை, காலிஃப்ளவர், சுண்டை வற்றல், ஆட்டு ஈரல், எள், பால், தயிர், நெல்லிக்காய் போன்றவை ரத்த விருத்திக்கு மிகவும் அவசியம். கொள்ளு-கண்டந்திப்பிலி ரசம் ரத்தத்தை புத்துணர்வாக்கும். முருங்கைக்கீரை ஜூஸும் ரத்தத்தை சுத்திகரிக்கும்.
*கல்லீரல்*
உறுப்புகளின் அரசன் என்றால் அது கல்லீரல் தான். நாம் உண்ணும் உணவைச் செரிப்பதில் கல்லீரலின் பங்கு மகத்தானது. நம் உடலில் கல்லீரல் மட்டும் தான் பாதியாக அறுத்தாலும் மீண்டும் வளரும் இயல்பு கொண்ட ஒரே உறுப்பு. அந்த அளவுக்கு கடினமான உழைப்பாளி இது. ஆரோக்கியமாக உள்ள கடைசி நொடி வரையிலும் சிறப்பாக வேலை செய்யும். இதனால்தான் கல்லீரல் பாதிப்புகளை முற்றிய நிலையிலேயே கண்டறிய முடிகிறது.
கல்லீரலைப் பாதுகாக்க எளிதில் ஜீரணமாகும் உணவுகளை அதிகமாக உண்பதும், இரவில் கண் விழிக்காமல் எட்டு மணி நேரம் உறங்குவதும் அவசியம்.
கீழாநெல்லி கல்லீரலின் நண்பன். இது, கல்லீரலில் உள்ள தேவையற்ற நஞ்சுகள், கொழுப்பை அகற்றி கல்லீரலைச் சுத்தம் செய்கிறது. மஞ்சள் காமாலை பாதிப்பு உள்ளவர்கள், மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் கீழாநெல்லியைப் பயன்படுத்தி கல்லீரலைச் சுத்தம் செய்யலாம். கீழாநெல்லி ஜூஸ், கல்லீரலைக் காக்கும் நல்ல ட்ரிங்க்.
*நுரையீரல்*
தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்ததும் செயல் படத் தொடங்கும் பிரதான உறுப்பு நுரையீரல் தான். நுரையீரலைப் பாதுகாப்பது என்பது நீண்ட ஆயுளுக்கான அடிப்படைகளில் ஒன்று. மூளை சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் செயல்பட நுரையீரல் வலுவாக இருக்க வேண்டும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. சுற்றுப்புறச் சூழல் தூய்மையின்மையாலும் காற்று மாசு ஏற்படுவதாலும் புகைப் பழக்கத்தாலும் நுரையீரல் மோசமாகப் பாதிக்கப்படுகிறது. நுரையீரலை சுத்திகரிப்பதில் புதினாவுக்குச் சிறப்பான இடம் உள்ளது. இதைத் தவிரவும் ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்த இஞ்சி, மஞ்சள் போன்றவையும் நுரையீரலைச் சுத்திகரிக்கவல்லவை. கிரீன் டீ, கேரட், எலுமிச்சை போன்றவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தினசரி காலை எழுந்ததும் பிராணயாமம் எனும் மூச்சுப் பயிற்சி செய்வதும் ஓஸோன் நிறைந்த அதிகாலைக் காற்றைச் சுவாசிப்பதும் நுரையீரலுக்கு நல்லது.
*இதயம்*
நாம் துடிப்புடன் இருக்க நமக்காகத் துடித்துக்கொண்டே இருக்கும் உறுப்பு இதயம். உடல் முழுதும் ரத்த ஓட்டம் சீராக இருக்க இதயத் துடிப்பு சீராக இருக்க வேண்டியது அவசியம். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாடாக வைத்திருப்பது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான முக்கியமான வழி. புகைப் பழக்கம் இதயத்துக்கு எமன். கேரட், பீட்ரூட் போன்ற கரோட்டினாய்டு நிறைந்த உணவுகளும் சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரிக் நிறைந்த உணவுகளும் இதயத்தைச் சுத்திகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வாக்கிங், ஜாகிங், நீச்சல், சைக்கிளிங், ஸ்கிப்பிங் போன்ற கார்டியோக் பயிற்சிகளும் நடனம், ஏரோபிக்ஸ் பயிற்சியும் இதயத்தைக் காக்கும் நற்பழக்கங்கள். செம்பருத்தி ஜூஸ் இதயத்துக்கு இதமாகும்.
*சிறுநீரகம்*
நமது உடலின் கழிவுத் தொழிற்சாலை இதுதான். உடல் முழுதும் பயணித்து ரத்தம் சேகரித்துக் கொண்டுவரும் தேவையற்ற கழிவுப் பொருட்களை ரத்தத்தில் இருந்து பிரிக்கும் முக்கியமான வேலையைச் சிறுநீரகங்கள் செய்கின்றன. தினசரி போதுமான அளவு தண்ணீர் பருகாதது, மதுப்பழக்கம், அதிக உப்புத்தன்மை கொண்ட தண்ணீர் போன்றவற்றால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது. வாழைத்தண்டு சிறுநீரகத்தை சுத்திகரித்து சிறப்பாகச் செயல் படவைக்கிறது. நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் அதிகமாக எடுத்துக்கொள்வதன் மூலம் சிறுநீரகத்தைக் காக்கலாம்.
வாழைத்தண்டு - வெள்ளரி ஜூஸ் சிறுநீரகத்தை சீர்ப்படுத்தும்.
வைட்டமின் வாரியர்ஸ்!
வைட்டமின்கள்
நோய் எதிர்ப்பு சக்திக்கு அடிப்படையானவை. ஒவ்வொரு வைட்டமினிலும் ஒவ்வொரு வகையான சத்துக்கட்டுமானம் அமைந்திருப்பதால், இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நம் உடலைக் காக்கின்றன.
*வைட்டமின் சி*
நுரையீரலின் நண்பன் வைட்டமின் சி தான். ஜலதோஷம், இருமல், தொண்டை கரகரப்பு ஆகியவற்றை வைட்டமின் சி விரட்டும். கொரோனா காலத்தில் வைட்டமின் சியை தேடி சேர்க்க வேண்டியது அவசியம். சிட்ரஸ் நிறைந்த பழங்களான எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகியவற்றிலும் நெல்லிக்காய், ஆப்பிள் ஆகியவற்றிலும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. குறிப்பாக, நெல்லிக்காயில் சளியை விரட்டும் அற்புதமான வைட்டமின் சி நிறைந்திருக்கிறது.
மழைக் காலம் தொடங்கும் முன்பு ஒரே ஒரு நெல்லிக்காய் உண்டால், மழையில் நனைந்தாலும் ஜலதோஷம் பிடிக்காது என்பார்கள். எனவே, வாரம் இரண்டு நெல்லிக்காயாவது சாப்பிடுங்கள். இயலாதவர்கள் நெல்லிக்காய் ஜூஸ் சாப்பிடலாம்.
மேலும், பெரிய நெல்லிக்காய், கொய்யாப்பழம் போன்றவற்றில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது, சளி முதல் புற்றுநோய் வரை நோய் வராமல் பாதுகாக்கும்.
*வைட்டமின் ஏ மற்றும் டி*
வைட்டமின் ஏ மற்றும் டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன. வைட்டமின் ஏ பார்வைக் குறைபாடுகளைப் போக்குகிறது, வைட்டமின் டி எலும்பு உறுதித் தன்மைக்கு அவசியமாகிறது. வைட்டமின் ஏ நிறைந்த அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, சுண்டைக்காய், கேரட், தக்காளி, பொன்னாங்கண்ணிக்கீரை, பசுநெய், வெண்ணெய் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
*வைட்டமின் பி*
*பி6 வைட்டமின்*
நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு உயிரி ரசாயன விளைவுகளுக்கு (biochemical reactions) உதவுகிறது. சில வகை பி வைட்டமின்கள், ரத்த அணுக்கள் உற்பத்திக் குறைபாட்டை சரிசெய்யப் பயன்படுகின்றன. இவை, ரத்தசோகை மற்றும் நரம்பு மண்டலப் பாதிப்பை சீர்செய்யும்.
*வைட்டமின் இ*
சிறந்த ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படும். புற்று நோயைத் தடுக்க உதவுகிறது. முதுமை அடைதலையும் குறைப் பிரசவத்தையும் தடுக்க உதவுகிறது.
*துத்தநாகமும், மக்னீசியமும்!*
நம்முடைய செல்கள் ஃபிட்டாக இருந்தால் தான், நோய்க்கிருமிகளுக்கு எதிராகச் செயல்பட முடியும்.
இதற்கு, துத்தநாகம் அவசியம். வைரஸ் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றலை துத்தநாகம் அளிக்கிறது. கடலைப் பருப்பு, உலர்ந்த தேங்காய், எள் போன்றவற்றில்
துத்தநாகம் உள்ளது. மக்னீசியம் இல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி முழுமை பெறாது. உடலில் நடக்கும் 300-க்கும் மேற்பட்ட உயிரி மாற்றங்களுக்கு இது அவசியம். சிறுநீரகம் உள்ளிட்ட ஒவ்வோர் உறுப்பின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கும் இது அவசியம். கீரைகள், கோதுமைப் புல், நட்ஸ், விதைகள் போன்றவற்றில் மக்னீசியம் நிறைவாக உள்ளது.
*கொள்ளு-கண்டந் திப்பிலி ரசம்*
தேவையானவை:
கொள்ளு - 2 டீஸ்பூன், கண்டந்திப்பிலி - 1 துண்டு, மிளகு, சீரகம் - தலா 1/4 டீஸ்பூன், பூண்டு - 2 பற்கள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைக்க வேண்டும். பிறகு, தேவையான அளவு தண்ணீரில் அனைத்தையும் போட்டு நன்கு கொதிக்க வைத்து, இளஞ்சூடாகப் பருகலாம்.
*கீழாநெல்லி ஜூஸ்*
தேவையானவை:
கீழாநெல்லி இலை - 1 கைப்பிடி, கொத்தமல்லித் தழை, பனை வெல்லம் சிறிது, எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன், இந்து உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்ட வேண்டும். பிறகு தேவையான அளவு நீர் சேர்த்துப் பருகலாம்.
*முருங்கை கீரை ஜீஸ்:*
முருங்கைக்கீரை - 1 கப், மிளகு - 5, சீரகம், - 1 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன், இந்துப்பு, பனங்கற்கண்டு - தேவையானஅளவு.
செய்முறை:
முருகைக் கீரையுடன் மிளகு சீரகம், எலுமிச்சைச் சாறு சேர்த்து மிக்ஸியில் அடித்து, வடிகட்ட வேண்டும். பிறகு, இந்துப்பு, பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம். பனங்கற்கண்டுக்குப் பதிலாகத் தேனையும் பயன்படுத்தலாம்.
*வாழைத்தண்டு - வெள்ளரி ஜூஸ்*
தேவையானவை:
வாழைத்தண்டு (பொடியாக நறுக்கியது) - 1 கப், வெள்ளரித் துண்டுகள் ½ கப், எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன், பனங்கற்கண்டு - தேவையான அளவு.
அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்க வேண்டும். பிறகு, வடிகட்டிப் பருகலாம். பனங்கற்கண்டுக்குப் பதிலாக தேனும் பயன்படுத்தலாம்.
செம்பருத்தி, ரோஜா இதழ்களை நீரில் போட்டு நன்கு கொதிக்கவைக்க வேண்டும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் கலக்கி ஆறவிடவும். பிறகு எலுமிச்சைச் சாறு அல்லது இளநீர் சேர்த்துக் கலந்து பருகலாம்.
*வாழ்க வளமுடன்
0 comments