பிரசவத்திற்கு பின் உடல் எடை குறைய

By sivaprakashThiru - November 20, 2020

 *பிரசவத்திற்கு பின் உடல் எடை குறைய*


பிரசவம் என்பது பெண்களின் மறுபிறப்பு என்றே சொல்லலாம். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மகத்தான தருணம் தாய்மை அடைவது. தாய், குழந்தை இருவரின் உடல் நலத்தை பேணிக்காக்க நம் நாட்டில் பிரசவ சமயத்தில், பெண் தன் தாய்வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம். ஆனால் ஒரு கர்ப்பிணிபெண்ணுக்கு தரும் கவனம் குழந்தை பிறந்த பின்னும் தொடர வேண்டும். பிரசவத்துக்குப் பின் பெண்கள் குண்டாகி விடுவது சகஜம். அதை முறையான உணவு மற்றும் முறையான உடற்பயிற்சினால் குறைக்கலாம் 


பிரசவத்திற்கு பின் உடல் எடை குறைய


1. உங்களின் செல்லக் குழந்தை பிறந்த பின் ஏறும் எடையை குறைக்கலாம். அதற்கு முதல் தேவை “பத்தியம்” அல்ல. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அது அவசியம். தாய்ப்பால் கொடுக்கும் போது உங்களுக்கு சத்தான உணவு தேவை. எனவே அவசரப்பட்டு “டயட்” டில் இறங்கி விடாதீர்கள். உங்கள் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் தேவையின்றி “எக்ஸ்ட்ரா” கலோரிகளை ஏற்றிக் கொள்ளாமல் உணவு கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது.


2. நிறைய தண்ணீர் குடிக்கவும். உணவுடனும் குடிக்கவும். தண்ணீர் அதிகமாக குடிக்க,வயிறு உணவை குறைவாக எடுத்துக்கொள்ளும்.


3. உணவில் நார்ச்சத்தை அதிகமாக சேர்த்துக் கொள்ளவும். நார்ச்சத்து சாப்பிட்ட பின் சர்க்கரை உட்கிரகிக்கப்படுவதை தாமதப்படுத்தும். நார்ச்சத்தினால் வயிறு சீக்கிரமே நிறைந்தது போல் உணர்வீர்கள். பழங்கள், காய்கறி, பீன்ஸ், பழுப்பு அரிசி (கைக்குத்தல் அரிசி, முழுத்தானியங்கள், பார்லி, ஓட்ஸ்) முதலியவை நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகள்.


4. சர்க்கரையை கூடிய வரையில் தவிர்க்கவும். சர்க்கரையில் எந்த விதமான ஊட்டச்சத்தும் இல்லை. சர்க்கரைக்கு பதில் தேன் பனைவெல்லம்,கருப்பட்டி ,பனக்கற்கண்டு பயன்படுத்தலாம்.


5. கூடிய வரை கொழுப்பு உணவுகளை தவிர்க்கவும்.


6. உணவு உண்ணும் போது நன்றாக மென்று விழுங்கவும்.


7. ஆயுர்வேதம் தாய்க்கும் சேய்க்கும் ஏற்ற வாசனை திரவியங்கள் கலந்த உணவை வலியுறுத்துகிறது. உணவுகள் புதிதாக தயாரிக்கப்பட வேண்டும். ஈரப்பசை உடையதாக இருக்க வேண்டும். இளம் சூட்டுடன் பரிமாறப்பட வேண்டும். சீரகம், கருஞ்சீரகம், இஞ்சி, கடுகு, துளசி, மஞ்சள், வெந்தயம், இலவங்கப்பட்டை, பூண்டு (வறுத்து உபயோகிக்க வேண்டும் பச்சையாக அல்ல) முதலியவை உணவில் இடம் பெற வேண்டும். மாமிசம் இரு வாரங்களுக்கு ஒரு முறை போதும். காப்பி, டீ, வெள்ளை சீனி, பச்சை காய்கறிகள், உலர்ந்த உணவுகள் போன்றவற்றை தவிர்க்கவும்.


8. காய்கறிகளின் பயன்கள் காரட், தக்காளி வளர்சிதை மாற்றம் துரிதமாக நடைபெற உதவும் காய்கறிகள்.

பீட்ரூட், சிட்ரஸ் பழங்கள், தர்பூசணி போன்றவை உடலின் கொழுப்பை கரைக்கின்றன.


9. நெய்யை தவிர்க்காதீர்கள். சிறிதளவு பசுநெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


10. உணவைத் தவிர நிறைய இளம்சூடான சுத்தமான தண்ணீர், கொதிக்க வைத்து இளம் சூட்டுக்கு ஆறின பால் இவற்றை நாள் முழுவதும் குடித்து வரலாம்.


11. இளம் சூடான நல்லெண்ணையால் உடல் மசாஜ் செய்து கொண்டு குளிப்பது நல்லது.


12. ஒரு பருத்திப் புடவை எடுத்து வயிற்றை சுற்றி இறுக்கமாக கட்டிக் கொண்டால் வாயு சரிநிலையில் இருக்கும். வயிறு சாதாரண நிலைக்கு திரும்பும். இதை 42 நாட்கள் செய்யவும். தற்போது இதற்கென பிரத்யேக பெல்ட்டுகள் கிடைக்கின்றன.


13. ஆயுர்வேத திரிபால கஷாயம் உடல் எடை குறைய உதவும். 20 கிராம் த்ரிபாலா சூரணத்தை 200 மி.லி. நீருடன் கலந்து, நீர் 50 மி.லி. அளவுக்கு சுண்டும் வரை காய்ச்சவும். வடிகட்டி தேன் சேர்த்து பருகவும்.


14. கடுக்காய் வயிற்றை சுத்திகரிக்கும் குணமுடையது. உடல் கொழுப்பையும் குறைக்கும். கடுக்காய் தோலின் பொடியை 1 டீஸ்பூன் எடுத்து வெந்நீருடன் படுக்கும் முன்பு எடுத்துக் கொள்ள நலம் உண்டாகும் .


Thanks to

*🍃Sri Yoga & Naturopathy*🍃

  • Share:

You Might Also Like

0 comments