பெண்களுக்கான 30 வகை சிறப்பு உணவு... பூப்பெய்தல் முதல் மெனோபாஸ் வரை

By sivaprakashThiru - November 09, 2020

 *பெண்களுக்கான 30 வகை சிறப்பு உணவு... பூப்பெய்தல் முதல் மெனோபாஸ் வரை*


*எள்ளுருண்டை*


*தேவை:* கறுப்பு எள் - 100 கிராம், துருவிய வெல்லம் - 100 கிராம், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

*செய்முறை:* முதலில் வெறும் கடாயில் கறுப்பு எள்ளை வெடிக்கும் வரை நன்கு வறுத்து ஆறவிடவும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு சுற்று சுற்றி கொரகொரப்பாக அரைக்கவும். இதனுடன் துருவிய வெல்லம் சேர்த்து மேலும் இரண்டு சுற்று சுற்றி, பின்னர் நல்லெண்ணெய்விட்டு நன்கு கலந்து சிறிய சிறிய உருண்டைகளாகப் பிடித்துவைக்கவும். இதை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு, 20 நாள்கள் வரை கெடாமல் வைத்துப் பயன்படுத்தலாம். விருப்பப்பட்டால் ஒரு கைப்பிடி வறுத்த வேர்க்கடலையும் சேர்க்கலாம்.

*சிறப்பு:* கறுப்பு எள் பெண்களுக்கு நன்மை அளிக்கும். இது கருப்பைக்கு மிகவும் நல்லது. இதில் அதிக அளவு உள்ள கால்சியம் சத்து எலும்புகளை வலுப்படுத்தும். பற்களை உறுதிப்படுத்தும். மாதவிடாய் நேரத்தில் வரும் இடுப்பு வலியையும் சரிசெய்யும். இதில் இருக்கும் மெக்னீசியம் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். இரும்புச்சத்து ரத்த விருத்திக்கு உதவும்; ஒழுங்கற்ற மாதவிடாய்ப் பிரச்னையையும் சரிசெய்யும்.


*கவுனி அரிசி இடியாப்பம்*


*தேவை:* பதப்படுத்திய கவுனி அரிசி மாவு - ஒரு கப், தேங்காய் எண்ணெய் - கால் டீஸ்பூன், துருவிய தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன், தண்ணீர் - தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.

*செய்முறை:* முதலில் நீரை நன்கு கொதிக்கவிடவும். பிறகு அதில் உப்பு மற்றும் எண்ணெய்விட்டு வெந்நீரைச் சிறிது சிறிதாக மாவில் விட்டு நன்கு பிசையவும். இடியாப்ப நாழியில் மாவை வைத்துப் பிழிந்து ஆவியில் 6 – 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். அதன் மீது தேங்காய்த் துருவல் தூவிப் பரிமாறவும். இதைத் தேங்காய்ப்பால் அல்லது கடலை குருமாவுடன் ருசிக்கலாம்.

*சிறப்பு:* இது நார்மல் டெலிவரிக்கு உதவி செய்யும். இதில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு. எனவே, எடையைக் குறைக்க உறுதுணை புரியும். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க உதவும். பூப்படையும் பருவ நிலையில் உள்ள பெண்கள் இந்த அரிசியை வாரத்தில் இரண்டு முறையாவது எடுத்துக் கொள்ளலாம். இதை ஒரு பூப்பெய்தல் உணவு என்றும் கூறலாம். மனச்சோர்வையும் உடல் சோர்வையும் போக்கும்.


*அக்கி ரொட்டி*


*தேவை:* பதப்படுத்திய மாப்பிள்ளை சம்பா அரிசி மாவு (அ) பதப்படுத்திய சாதாரண பச்சரிசி மாவு - ஒரு கப், இஞ்சி (துருவியது) - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, பெரிய வெங்காயம் - ஒன்று, நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, தண்ணீர் - தேவையான அளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், வாழையிலை - சிறியது.

*தாளிக்க:* கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்.

*செய்முறை:* முதலில் கடாயில் எண்ணெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளிதம் செய்து, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். இதை மாவில் போட்டு தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு தளர பிசையவும். சிறிய வாழையிலையில் அடை வடிவில் ரொட்டிகளாகத் தட்டி, சூடான தவாவில் போட்டு எடுத்தால் ருசியான அக்கி ரொட்டி தயார்.

*சிறப்பு:* இது உடல் பலத்தைக் கூட்டும். ரத்தக் கொதிப்பு மற்றும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். இந்த அரிசி ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்புண்ணை சரிசெய்யும். நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும்.


*வெந்தயக்களி*


*தேவை:* புழுங்கல் அரிசி - ஒரு கப், வெந்தயம் - கால் கப், உளுந்து - ஒரு கைப்பிடி அளவு, கரைத்து வடிகட்டிய வெல்லம் (அ) கருப்பட்டிச்சாறு - 2 கப், நெய் (அ) எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், தண்ணீர் - தேவையான அளவு.

*செய்முறை:* புழுங்கல் அரிசி, வெந்தயம், உளுந்தை மூன்று மணி நேரம் ஊறவைத்து அரைத்தெடுக்கவும். அரைத்த மாவை தண்ணீர்விட்டுச் சற்று நீர்க்கக் கரைத்து வைத்துக்கொள்ளவும். பிறகு அடிகனமான பாத்திரத்தில் அரைத்த மாவைச் சேர்த்து கட்டியில்லாமல் முக்கால் பதம் வெந்து சுருண்டு வரும் வரை நன்கு கலக்கவும். சிறிதளவு நல்லெண்ணெய் (அ) நெய் விட்டுக் கொள்ளலாம். பிறகு கரைத்து வடிகட்டிய வெல்லம் (அ) கருப்பட்டிச்சாறுவிட்டு நன்கு கலந்து அல்வா போல சுருள வந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்த்து, இறுதியில் நல்லெண்ணெய் (அ) நெய்விட்டு இறக்கி சூடாகச் சாப்பிடவும்.

*சிறப்பு:* இதில் நார்ச்சத்து அதிகம். உடல் சூட்டைத் தணித்து அடிவயிற்றைக் குளிர்ச்சியடையச் செய்யும். மலச்சிக்கலைப் போக்கும். புரதம், நீர்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற பல சத்துகளை உள்ளடக்கியது. ஹார்மோன் சமசீரற்ற


*கேழ்வரகு உருண்டை*


*தேவை:* கேழ்வரகு மாவு - ஒரு கப், வெல்லம் (துருவியது) - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - மிக சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை, தண்ணீர் - தேவையான அளவு.

*செய்முறை:* முதலில் கேழ்வரகு மாவில் தேவையான அளவு தண்ணீர் கலந்து அதனுடன் சிட்டிகை உப்பு சேர்த்து சிறிய அடைகளாகச் சூடான கல்லில் தட்டி, மிகவும் சிறிதளவு எண்ணெய்விட்டு, வேகவைத்து எடுத்து ஆறவிடவும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் அடைகளை உடைத்துப் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதனுடன் துருவிய வெல்லம் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து இரண்டு சுற்று சுற்றி எடுத்து ஒரு பவுலில் சேர்த்து உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.

*குறிப்பு:* முதலில் இளகினாற்போல் இருக்கும். பிறகு ஆறியவுடன் இறுகிவிடும். விருப்பப்பட்டால் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துக்கொள்ளலாம்.

*சிறப்பு:* இதில் கால்சியம் சத்து மிக அதிகம். ரத்தச் சோகையைச் சரிசெய்யும். எலும்புகளை வலுப்படுத்தும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும். `ஓவர் பிளீடிங்’கைக் கட்டுப்படுத்தும். கர்ப்பிணிகளுக்கு மிகவும் உகந்தது.


*சிவப்பரிசி காரப் பணியாரம்*


*தேவை:* சிவப்பரிசி - ஒரு கப், இட்லி அரிசி - ஒரு கப், கறுப்பு உளுந்து - அரை கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, இஞ்சி (துருவியது) - ஒரு டீஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு. 

*தாளிக்க:* கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்.

*செய்முறை:*  முதலில் சிவப்பரிசி, இட்லி அரிசி, வெந்தயம், உளுந்தை எட்டு மணி நேரம் ஊறவைத்து அரைத்து, உப்பு கலந்து ஐந்து மணி நேரம் புளிக்கவிட்டு எடுத்து வைக்கவும். பிறகு கடாயில் நல்லெண்ணெய்விட்டு தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைத் தாளிதம் செய்து, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல் சேர்த்து நன்கு வதக்கி மாவில் கலக்கவும். குழிப்பணியாரச் சட்டியில் எண்ணெய் விட்டு, மாவை ஊற்றி எடுத்தால், கமகம ருசியான சிவப்பரிசி காரப் பணியாரம் ரெடி.

*சிறப்பு:* சிவப்பரிசி பாலிஷ் செய்யப்படாத அரிசி ஆகும். இதில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு. செலினீயம், துத்தநாகம் போன்ற கனிமச்சத்துகள் அதிகம். வைட்டமின் சி சத்தும் அதிகம். ஆன்டி கேன்சர் ஏஜென்ட்ஸ் நிறைய உள்ளன.


*வாழைப்பூ வடை*


*தேவை:* சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய வாழைப்பூ, கடலைப்பருப்பு - தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு, பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவவும்), பூண்டு - 8 பல், பச்சை மிளகாய் (அ) சிவப்பு மிளகாய் - 5, சோம்பு - ஒரு டீஸ்பூன், நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை (சேர்த்து) - ஒரு கைப்பிடி அளவு, பெரிய வெங்காயம் - ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.

*செய்முறை:* முதலில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சரிசியை ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் முதலில் சோம்பு, இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, மிளகாய் சேர்த்து இரண்டு சுற்று சுற்றி, பிறகு ஊறிய பொருள்களையும் சேர்த்து கொரகொரப்பாகக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம் மற்றும் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து பிசையவும். மாவை வடைகளாகத் தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

*சிறப்பு:* பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் நல்லது. கணையம் வலுப்பெறும். மாதவிடாய் நேரத்தில் வரும் அதீத உதிரப்போக்கைக் கட்டுப்படுத்தும். வெள்ளைப் படுதலைச் சரிசெய்யும். கெட்ட கொழுப்பைக் கரைக்கும்.


*எள்ளுத் துவையல்*


*தேவை:* கறுப்பு எள் - 100 கிராம், உளுத்தம்பருப்பு - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 6, புளி - நெல்லிக்காய் அளவு, தேங்காய் (துருவியது) - ஒரு கைப்பிடி அளவு, உப்பு -! தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

*தாளிக்க:* கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

*செய்முறை:* முதலில் வெறும் கடாயில் எள்ளை வெடிக்கும் வரை நன்கு வறுத்தெடுக்கவும். பிறகு ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய்விட்டு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல் மற்றும் புளி சேர்த்து வதக்கவும். ஆறிய பிறகு எள்ளுடன் சேர்த்து, உப்பு கலந்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்தெடுக்கவும். தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைக் கொண்டு தாளிதம் செய்து சேர்த்தால், வீடே மணக்கும் அருமையான, சத்தான எள்ளு துவையல் ரெடி. இது உளுந்தங்கஞ்சி, தேங்காய்க்கஞ்சி, வெந்தயக்கஞ்சி ஆகியவற்றுக்குப் பிரமாதமாக இருக்கும்.

*சிறப்பு:* இதில் ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட், கரையும் நார்ச்சத்து, புரதம், மெக்னீசியம் போன்றவை அதிகளவில் உள்ளன. இது ஒழுங்கான மாதவிடாய் சுழற்சிக்குப் பெரிதும் உதவுகிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிறது.


*தேங்காய்க் கஞ்சி*


*தேவை:* வரகரிசி, குதிரைவாலி அரிசி அல்லது பச்சரிசி - ஒரு கப், தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி அளவு, பூண்டு - 10 பல், சீரகம் - அரை டீஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், தேங்காய்ப்பால் - 200 மில்லி, தண்ணீர் - 4 கப், உப்பு - தேவையான அளவு.

*செய்முறை:* முதலில் ஒரு குக்கரில் கழுவி சுத்தம் செய்த அரிசியுடன் தேங்காய்த் துருவல், பூண்டு, சீரகம், வெந்தயம், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஐந்து விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் கடைந்து, அதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்து சூடாகப் பருகவும். இதற்கு எள்ளுத் துவையல் அருமையாக இருக்கும். இதைக் காலை நேர சிற்றுண்டியாக அனைவரும் உண்ணலாம்.

*சிறப்பு:* இது உடல்சூட்டைத் தணிக்கும். கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும். `ஓவர் ப்ளீடிங்’கைக் கட்டுப்படுத்தும். வறட்டு இருமலையும் கட்டுப்படுத்தும். தலைமுடியையும் சருமத்தையும் மினுமினுப்பாக்கும். இந்த உணவை மாதவிடாய் நேரங்களில் எடுக்கும்போது வயிற்றுவலியைச் சரிசெய்து சோர்வைப் போக்குகிறது. இதில் வெந்தயம், பூண்டு சேருவதால் இது ஒரு சிறந்த ஊட்டச்சத்து கஞ்சியாக இருக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கும் சிறந்தது.


*கருப்பட்டி கவுனி அரிசி பணியாரம்*


*தேவை:* கவுனி அரிசி - 200 கிராம், கறுப்பு உளுந்து - 50 கிராம், கருப்பட்டி - 150 - 200 கிராம், தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி அளவு, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, நல்லெண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு, நெய்யில் வறுத்த முந்திரி - 10, தண்ணீர் - தேவையான அளவு.

*செய்முறை:* முதலில் அரிசி மற்றும் உளுந்தைச் சேர்த்து ஆறு மணி நேரம் ஊறவிட்டு நன்கு அரைத்து முதல் நாள் இரவே எடுத்து வைக்கவும். பிறகு அதில் சிட்டிகை உப்பு மற்றும் ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல், முந்திரி ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து வைக்கவும். கருப்பட்டியைச் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்து கொதிக்கவிட்டு வடிகட்டி மாவில் சேர்த்து, பணியார மாவு பதத்துக்குக் கலந்து வைக்கவும். பிறகு குழிப்பணியாரச் சட்டியில் நல்லெண்ணெய் அல்லது நெய்விட்டு, கொஞ்சம் கொஞ்சமாக மாவை ஊற்றி நன்கு வெந்ததும் எடுக்கவும்.

*சிறப்பு:* இது ரத்தத்தைச் சுத்திகரிக்கும். இடுப்பு எலும்பை உறுதிபெறச் செய்யும். பாலூட்டும் தாய்மார்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் சிறந்தது.


*வெந்தயக்கஞ்சி*


*தேவை:* வெந்தயம் - ஒரு கைப்பிடி அளவு, பச்சரிசி - 200 கிராம், பூண்டு - 8 பல், உளுந்து - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் (துருவியது) - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - 4 - 5 டம்ளர்.

*செய்முறை:* முதலில் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றைக் கழுவி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு அதனுடன் பூண்டு, துருவிய தேங்காய், பெருங்காயத்தூள், சீரகம், கறிவேப்பிலை, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ஐந்து விசில் விட்டு இறக்கவும். சத்தான, குளிர்ச்சியான வெந்தயக் கஞ்சி தயார். இதை சூடாகப் பருகவும்.

*சிறப்பு:* உடல் சூட்டைத் தணிக்கும். மலச்சிக்கலைப் போக்கும். இதில் கரையும் நார்ச்சத்து அதிகம். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். இரும்புச்சத்து அதிகம். இது நரம்புகளை வலுப்படுத்தி நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். இன்சுலின் சுரப்பைச் சரிசெய்யும். தாய்ப்பால் சுரப்புக்கு உதவும். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்திக்கு உதவும். பொட்டாசியம் சத்தும் அதிகம். கூந்தல் வளர்ச்சிக்கு உதவும். பால் சுரப்பை அதிகரிக்கும்.


*சிவப்பு அரிசி சிங்காரப் புட்டு*


*தேவை:* பதப்படுத்திய சிவப்பு அரிசி புட்டு மாவு - ஒரு கப், துருவிய தேங்காய் - 3 கைப்பிடி அளவு, துருவிய வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை - அரை கப், தண்ணீர் - தேவையான அளவு, ஊறவைத்த பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

*செய்முறை:* முதலில் சிறிதளவு தண்ணீரை உப்பு சேர்த்து கொதிக்கவைத்து மாவில் தெளித்து, புட்டுக்குப் பிசைவதுபோல பொலபொலவென பிசிறவும். அதனுடன் 2 கைப்பிடி தேங்காய்த் துருவல், ஊறவைத்த பாசிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பிசிறி இட்லிப் பாத்திரத்தில், 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து இறக்கவும். பிறகு புட்டை உதிர்த்துவிட்டு அதனுடன் நெய், ஒரு கைப்பிடி தேங்காய்த் துருவல், துருவிய வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து சூடாகச் சாப்பிடவும்.

*சிறப்பு:* இதில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக உள்ளது. இது உடல் எடை குறைய உதவுகிறது. இதில் செலினீயம், துத்தநாகம், வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அகியவை அதிகம். தயாமின் சத்தும் உள்ளது. குழந்தையின்மை பிரச்னைக்குத் தீர்வாகும்.


*உளுந்து கேரட் போண்டா*


*தேவை:* உளுந்து - 250 கிராம், கேரட் (துருவியது) - அரை கப், பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்), பெரிய வெங்காயம் - ஒன்று, கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை (சேர்த்து) - ஒரு கைப்பிடி அளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி (துருவியது) - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.

*செய்முறை:* முதலில் உளுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைத்து நன்கு அரைக்கவும். பிறகு அதில் துருவிய கேரட் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், இஞ்சி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். சூடான எண்ணெயில் மாவைச் சிறிய போண்டாக்களாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

*சிறப்பு:* இதில் பீட்டாகரோட்டினாய்டு அதிகம் உள்ளது. இது கண்களுக்கு மிகவும் நல்லது. சருமத்துக்கு மினுமினுப்பைத் தருகிறது. மாதவிடாய் நேரத்தில் வரும் சிறுநீர்கடுப்பை சரிசெய்கிறது. எலும்புகளை வலுப்படுத்தும். நரம்புகளை உறுதிப்படுத்தும். நார்ச்சத்து, பொட்டாசியம் மிகுந்து காணப்படுகிறது. பூப்பெய்தல் காலத்தில் மாலை நேர சிற்றுண்டியாக இதைப் பெண் குழந்தை களுக்குச் செய்து தரலாம்.


*கறுப்பு உளுந்தங்கஞ்சி*


*தேவை:* கறுப்பு உளுந்து - 100 கிராம், பனிவரகு - 100 கிராம், பூண்டு - 12 பல், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் (பொடித்தது) - அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 5, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா (சேர்த்து) - ஒரு கைப்பிடி அளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மோர் - 200 மில்லி, உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் அல்லது நெய் - ஒரு டீஸ்பூன், தண்ணீர் - தேவையான அளவு.

*செய்முறை:* பனிவரகு, கறுப்பு உளுந்தை 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். ஒரு குக்கரில் எண்ணெய்விட்டு ஊறிய பனிவரகு மற்றும் பருப்பை லேசாக மணம் வரும்வரை வதக்கவும். பிறகு அதனுடன் வெந்தயம், பொடித்த மிளகு, சீரகம், நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, புதினா, பெருங்காயத்தூள், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஐந்து விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் மோர்விட்டு நன்கு கலந்து இளம்சூடாகப் பருகவும்.

*சிறப்பு:* கால்சியம், பாஸ்பரஸ் சம அளவில் உள்ளது. இது பித்தத்தைத் தணிக்க உதவும். உடலின் நச்சுகளை வெளியேற்றும். கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். சிறுநீர் சார்ந்த பிரச்னைகளைச் சரிசெய்கிறது. கருத்தரிப்புக்கு உதவுகிறது. பால் சுரப்புக்கும் உதவுகிறது.


*வேப்பிலை மஞ்சள் உருண்டை*


*தேவை:* கொழுந்து வேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, சுத்தமான விரலி மஞ்சள் - ஒரு சிறிய துண்டு, இந்துப்பு - ஒரு சிட்டிகை.

*செய்முறை:* முதலில் விரலி மஞ்சளை ஒரு மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். பிறகு சுத்தம் செய்த வேப்பிலையுடன் ஊறிய மஞ்சள் சேர்த்து நன்கு மையாக அரைத்து இதனுடன் ஒரு சிட்டிகை இந்துப்பு கலந்து ஒரு சிறிய கோலிகுண்டு அளவு எடுத்து உள்ளுக்குச் சாப்பிடவும். பிறகு ஒரு டம்ளர் வெந்நீர் பருகவும். இந்த விழுதை நன்கு உலர்த்தி டப்பாவில் அடைத்து ஒரு டீஸ்பூன் வீதம் ஒரு டம்ளர் (200 மில்லி) வெந்நீருடன் கலந்தும் அருந்தலாம். வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.

*சிறப்பு:* வேம்பில் வைட்டமின் இ நிறைய உள்ளது. கரோட்டினாய்டு அதிகம். ஆன்டி இன்ஃப்ளமேடரி பிராப்பர்டீஸ் அதிகம். எனவே, இது வலியைக் குறைக்க உதவும். எசென்ஷியல் ஃபேட்டி ஆசிட்ஸ் அதிகம் காணப்படுகிறது. இது இதயம் மற்றும் தோல் ஆகியவற்றின் பாதுகாப்புக்கு உதவுகிறது. இதனுடன் மஞ்சளும் சேரும்போது இது ஒரு சிறந்த ஆன்டி பேக்டீரியல் ஆகும். இது வயிற்றில் மற்றும் கர்ப்பப்பையில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. கர்ப்பப்பைப் புற்றுநோய் வராமல் பாதுகாக்கும்.


*மாதுளை மணப்பாகு*


*தேவை:* ஃபிரெஷ் மாதுளைச்சாறு - 300 மில்லி, இஞ்சிச்சாறு - 100 மில்லி, தேன் - 2 டேபிள்ஸ்பூன், வெல்லம் அல்லது கருப்பட்டி - 200 கிராம், சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் - தலா கால் டீஸ்பூன், தண்ணீர் - தேவையான அளவு.

*செய்முறை:* வெல்லம் அல்லது கருப்பட்டியுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கரைத்து வடிகட்டி, அடுப்பிலேற்றி கம்பி பதம் வரும் வரை நன்கு காய்ச்சி பிறகு அதனுடன் (தண்ணீர் சேர்க்காத) மாதுளைச்சாறு, இஞ்சிச் சாறு கலந்து இரண்டு நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும். அதில் சுக்கு மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து பிறகு தேன் சேர்த்து ஒரு பாட்டிலில் சேகரித்துக்கொள்ளலாம். தினமும் கால் பங்கு மணப்பாகு முக்கால் பங்கு தண்ணீர் சேர்த்து காலை வேளைகளில் பருகி வரலாம்.

*சிறப்பு:* மாதவிடாய் கால அதிக ரத்த இழப்பை சமன் செய்ய உதவுகிறது. இதில் ஊட்டச்சத்துகள், பைட்டோ கெமிக்கல்கள் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைய உள்ளன. கெட்ட கொழுப்புகள் படிவதைத் தடுக்கிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதில் இயற்கையாக உள்ள `ஆஸ்பிரின்’ ரத்தம் உறைவதைத் தடுக்கும். ரத்த பேதியை நிறுத்தும். மாதவிடாய்க் காலங்களில் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய பழம் மாதுளை.


*கற்றாழை மோர் கடையல்*


*தேவை:* கற்றாழை மடல் - ஒன்று, மோர் - 100 மில்லி, சீரகத்தூள் - கால் டீஸ்பூன், புதினா, கொத்தமல்லித்தழை (சேர்த்து) - ஒரு கைப்பிடி அளவு, வெள்ளை மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - தேவையான அளவு.

*செய்முறை:* கற்றாழை மடலுக்குள் இருக்கும் சோற்றுப் பகுதியை எடுத்து குறைந்து 6 - 8 முறை நன்கு கழுவி பிறகு அதனுடன் புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து, அதனுடன் நன்கு கரைத்த மோர், உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து உடனே பருகவும் (வடிகட்டாமல் அருந்துவதே சிறந்தது. விருப்பப்பட்டால் மட்டும் வடிகட்டலாம்).

*சிறப்பு:* பித்தத்தைக் குறைக்கவும், உடல் சூட்டைத் தணிக்கவும் உதவுகிறது. நீர்க்கடுப்பு, நீர் எரிச்சலைச் சரிசெய்யும் மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். கண் சிவப்பு மறையும். பாத எரிச்சலைப் போக்கும். தலை சூட்டைக் குறைக்கும். வெள்ளைப்படுதல் சரியாகும். பதற்றம் நீங்கும். வயிற்று உபாதைகளைப் போக்கும்.


*தினை அரிசி அதிரசம்*


*தேவை:* தினை அரிசி - 500 கிராம், வெல்லம் - 400 கிராம், சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் - தலா அரை டீஸ்பூன், எள் - ஒரு டீஸ்பூன், நெய் (அ) நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன். பொரிக்க: எண்ணெய் - தேவையான அளவு.

*செய்முறை:* முதலில் தினை அரிசியை மூன்று மணி நேரம் ஊற வைத்து பிறகு நீரை வடியவிட்டு நிழலில் 20 நிமிடங்கள் உலரவிட்டு, அது சற்று ஈரமாக இருக்கும்போதே அரைத்து சலித்துவைக்கவும். பிறகு வெல்லத்தை சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்து வடிகட்டி கொதிக்கவிட்டு உருட்டு பதத்தில் பாகு எடுத்து அடுப்பை அணைத்துவிடவும். அதனுடன் எள், சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து அதனுடன் இந்த மாவைக் கொட்டிக் கலந்து, நெய் (அ) நல்லெண்ணெய் சேர்த்து, அதிரச மாவுப் பக்குவத்தில் கிளறி வைக்கவும் பிறகு மூன்று மணி நேரம் கழித்து சிறிய தட்டைகளாகத் தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால் மணமணக்கும் அதிரசம் தயார்.

*சிறப்பு:* இதில் புரதம், கால்சியம், நார்ச்சத்து, பீட்டாகெரோட்டின் அதிகம். கூந்தல், கண் ஆகியவற்றுக்கு நல்லது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம். இறந்த செல்கள் மீண்டும் வளர உதவும். கருமுட்டை வளர்ச்சிக்கு உதவும். மன அழுத்தத்தைக் குறைக்கும்.


*கொண்டைக்கடலை அவல் வெஜிடபிள் சாலட்*


*தேவை:* வேகவைத்த வெள்ளைக் கொண்டைக்கடலை - ஒரு கப், கார்குருவை அரிசி அவல் (அ) கவுனி அரிசி அவல் - அரை கப் (ஊற வைக்கவும்), மஞ்சள், பச்சை, சிவப்பு குடமிளகாய் கலவை - கால் கப், கேரட் (பொடியாக நறுக்கியது) - கால் கப், முட்டைகோஸ் (துருவியது) - ஒரு கைப்பிடி அளவு, துருவிய தேங்காய் - ஒரு கைப்பிடி அளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள், மிளகுத்தூள், சாட் மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன், எள்ளு பேஸ்ட் - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை, புதினா (நறுக்கியது) - ஒரு கைப்பிடி அளவு, நறுக்கிய வெங்காயம் - ஒரு கைப்பிடி அளவு, உப்பு - தேவைக்கேற்ப. எள்ளு பேஸ்ட் செய்ய: கறுப்பு எள் - ஒரு கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் - 3, வேர்க்கடலை - ஒரு கரண்டி, எலுமிச்சைச்சாறு - தேவைக்கேற்ப

*செய்முறை:* கறுப்பு எள்ளை நன்கு வெடிக்கும் வரை வறுத்து பிறகு காய்ந்த மிளகாய், வேர்க்கடலை சேர்த்து வறுத்து நன்கு அரைத்து, எலுமிச்சைச்சாறு விட்டு கலந்து வைத்துக்கொள்ளவும். எள்ளு பேஸ்ட் தயார்.

ஒரு பவுலில் வேகவைத்த கடலை, ஊறவைத்த அவல் ஆகியவற்றுடன் குடமிளகாய், கேரட், முட்டைகோஸ், வெங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும். அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் எள்ளு பேஸ்ட்டும் சேர்த்து நன்கு கலக்கவும். சீரகத்தூள், மிளகுத்தூள், சாட் மசாலாத்தூள், தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து நன்கு கலந்து, இறுதியாக எலுமிச்சைச் சாறு விட்டு, உப்பு சேர்த்துக் கலக்கவும். காலை உணவாக இதை ஒரு கப் சாப்பிடலாம்.

*சிறப்பு:* முழு ஊட்டச் சத்தும் ஒருசேர உடலுக்குக் கிடைக்கும். நோய் எதிர்ப்புத் திறனைக்கூட்ட உதவும்.


*இரும்புச்சத்து சூப்*


*தேவை:* முருங்கைக்கீரை - 5 கைப்பிடி அளவு, பொன்னாங்கண்ணிக்கீரை - 5 கைப்பிடி அளவு, சின்ன வெங்காயம் - 8 - 10, பூண்டு - 10 பல், கிராம்பு - 2, பட்டை - ஒன்று, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் (பொடித்தது) - ஒரு டீஸ்பூன், தக்காளி - ஒன்று, பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, இரண்டாவது முறை அரிசியைக் களைந்த தண்ணீர் - 5 டம்ளர்.

*செய்முறை:* முதலில் கீரைகளைச் சுத்தம் செய்து அலசி ஒரு குக்கரில் போடவும். பிறகு அதனுடன் தோலுரித்த சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, நறுக்கிய தக்காளி, கிராம்பு, பட்டை, பாசிப்பருப்பு ஆகியவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 5 டம்ளர் அரிசி களைந்த சுத்தமான தண்ணீர்விட்டு ஐந்து விசில் வந்ததும் இறக்கி வடிகட்டவும். அதில் வடிகட்டிய சக்கையை ஒரு மிக்ஸியில் ஓர் ஓட்டு ஓட்டி அதை மீண்டும் வடிகட்டிய தண்ணீர்விட்டு கலந்து வடிகட்டவும் (இதனால் சத்துகள் வீணாகாமல் இருக்கும்). பிறகு அதில் பொடித்த மிளகு, சீரகம் மற்றும் எலுமிச்சைச்சாறுவிட்டு சூடாகப் பருகவும்.

*சிறப்பு:* முக்கிய அமினோ அமிலங்கள் அடங்கிய ஒரே கீரை முருங்கைக்கீரை. இதில் அபரிமிதமான இரும்புச்சத்து அடங்கியுள்ளது. ரத்த விருத்திக்கும், உடல் வலுப்பெறவும், மூளை சுறுசுறுப்படையவும் உதவும். இதில் வைட்டமின்கள், கனிமச்சத்துகள், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ஆகியவை உள்ளன.


*ஹெர்பல் பொடி*


*தேவை:* கறுப்பு உளுந்து - ஒரு கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5 - 6, பெருங்காயம் - ஒரு துண்டு, கறிவேப்பிலை - 3 கைப்பிடி அளவு, சுத்தம் செய்து உலர்த்திய முருங்கைக்கீரை - 5 கைப்பிடி அளவு, உப்பு - தேவையான அளவு.

*செய்முறை:* முதலில் வெறும் கடாயில் கறுப்பு உளுந்தை நன்கு வறுத்துக்கொள்ளவும். பிறகு அதே கடாயில் வெந்தயம், பச்சரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, முருங்கைக்கீரை என ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுத்து இவற்றை மிக்ஸி ஜாரில் அரைத்து இவற்றுடன் உப்பு கலந்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியில் ஒரு டீஸ்பூன் அல்லது ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து சூடான சாதத்தில் கலந்து நெய் அல்லது நல்லெண்ணெய்விட்டு சூடாகச் சாப்பிடவும். இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ளலாம். பொரியல் செய்து இறக்கும்போது இதை ஒரு டீஸ்பூன் தூவி இறக்கலாம்.

*சிறப்பு:* கர்ப்பப்பையை வலுவடைய செய்யும். உடலை வலுப்படுத்தி எலும்புகளை உறுதிப்படுத்தி திடமாக வாழ வழிசெய்யும்.


பிரண்டை பச்சாடி


*தேவை:* பிரண்டை (நார் எடுத்தது) - ஒரு கப், சின்ன வெங்காயம் - 15, பூண்டு - 10 பல், புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு, தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் - 6 – 8, கறுப்பு உளுந்து - ஒரு கைப்பிடி அளவு, துருவிய இஞ்சி - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு. 

*தாளிக்க:* கடுகு, உளுந்து, சீரகம் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங் காயத்தூள் - சிறிதளவு.

*செய்முறை:* முதலில் ஒரு கடாயில் நல்லெண்ணெய்விட்டு பிரண்டையை வதக்கி எடுத்துவைக்கவும். பிறகு அதே கடாயில் தோலுரித்த சின்ன வெங்காயம், பூண்டு, புளி, உளுந்து, காய்ந்த மிளகாய், இஞ்சி, தேங்காய்த் துருவல் என அனைத்தையும் வதக்கி, பிரண்டை, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்தெடுக்கவும். பிறகு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைக் கொண்டு தாளித்து சேர்க்கவும். மணமணக்கும் பிரண்டைப் பச்சடி தயார்.

*சிறப்பு:* இதற்கு வஜ்ரவள்ளி எனும் பெயரும் உண்டு. அபரிமிதமான சுண்ணாம்புச்சத்து அடங்கியிருப்பதால் எலும்புகளுக்கு மிகவும் நல்லது. ஜீரணத்துக்கு உதவும். நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும். பசியைத் தூண்டும். காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும். இடுப்பு எலும்புகளை வலுப்படுத்தும். பற்களுக்கும் ஈறுகளுக்கும் நல்லது. ரத்த விருத்திக்கும் உதவுகிறது.


*நிடக்காய லேகியம்*


*தேவை:* ஓமம் - 50 கிராம், சுக்கு - 50 கிராம், கிராம்பு - 50 கிராம், சூலத்தவரை - 50 கிராம், கண்டந்திப்பிலி - 50 கிராம், அரிசி திப்பிலி - 50 கிராம், ஏல அரிசி - 25 கிராம், சித்தரத்தை - 50 கிராம், ஜாதிக்காய் - 50 கிராம், மாசிக்காய் - 25 கிராம், வெள்ளை மிளகு - 50 கிராம், கருஞ்சீரகம் - 50 கிராம், கொத்தமல்லி விதை (தனியா) - 50 கிராம், பெருங்காயம் - 25 கிராம், சீரகம் - 50 கிராம், கடுக்காய் - 50 கிராம், எள் - 50 கிராம், விரலி மஞ்சள் - 50 கிராம், தேன் - 100 மில்லி, நல்லெண்ணெய் - 100 மில்லி, கருப்பட்டி - 700 கிராம், தண்ணீர் - 4 டம்ளர் (800 மில்லி).

*செய்முறை:* கொடுக்கப்பட்ட பொருள்களை (கருப்பட்டி, எண்ணெய், தேன் தவிர) வெறும் சட்டியில் வறுத்துப் பொடித்து சலித்து வைக்கவும். அல்லது நாட்டு மருந்து கடையில் பொடியாகக் கிடைக்கும். வாங்கிப் பயன்படுத்தலாம். பிறகு கருப்பட்டியில் 4 டம்ளர் தண்ணீர்விட்டுக் கரைத்து வடிகட்டி கொதிக்கவிட்டு கம்பிப் பதம் வந்ததும் சலித்தவைத்த பொடியைத் தூவி நன்கு கிளறவும.


  • Share:

You Might Also Like

0 comments