தொப்பை குறைய & மலச்சிக்கல் நீங்க யோகா | Malachikkal & thoppai kuraiya yoga

By sivaprakashThiru - December 28, 2017

தொப்பை குறைய & மலச்சிக்கல் நீங்க யோகா | Malachikkal & thoppai kuraiya yoga





யோக முத்திராவை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு முதுகுதண்டில் உள்ள இறுக்கம் நீங்குகிறது. இளமை ஏற்படுகின்றது. முதுகு தண்டுவடம் வழியாக செல்லும் உடலின் முக்கிய நரம்புகள் எல்லாம் பலம் பெறுகின்றன.  நல்ல ஆரோக்கியத்தை எட்டுகின்றன.

நாள் முழுவதும் சுறுசுறுப்பு தொடர்கிறது. முகத்தில் பொலிவும், தேஜசும் ஏற்படுகிறது. முக்கியமாக இரண்டு குதிக்கால்களும், பெருங்குடலும் இந்த ஆசனத்தின் போது நன்றாக அழுந்துவதால் நீடித்த மலச்சிக்கலும் நீங்குகிறது.

குடலை கழுவினால் மட்டுமே உடலை வளர்க்க முடியும் என்பது தமிழ்வாக்கு. அதற்கேற்ப மலச்சிக்கலை நீங்கி மனச்சிக்கலையும் நீக்குவதால் யோக முத்திரா ஆசனங்களில் முத்திரை பதிக்கிறது. இந்த ஆசனம் எளிமையானது.



செய்முறை:(தொப்பை குறைய & மலச்சிக்கல்)
பத்மாசனத்தில் அமரவும். இரண்டு உள்ளங்கைகளையும், இரண்டு குதிங்கால்களின் மேல் வைத்து கைவிரல்களை மூடிக் கொள்ளவும். நிமிர்ந்து நேரே உட்காரவும். நுரைஈரல் நிரம்பும் அளவு நன்றாக மூச்சை உள் இழுக்கவும். இப்போது மூச்சை விட்டுக் கொண்டே முன்பக்கம் தரையை மூக்கு தொடும் வரை குனியவும். இந்த நிலையில் 10 முதல் 15 நொடிகள் இருக்கவும். இப்படி இருக்கும் போது மூச்சை சௌகரியப்படி விடவும் வாங்கவும் செய்யவும். மூச்சை அடக்க வேண்டிய அவசியம் இல்லை. பிறகு மூச்சை இழுத்தவாறே நிமிர்ந்து சாதாரண நிலைக்கு வரவும். இந்த மாதிரி அவரவர்க்கு வேண்டியபடி மூன்று முதல் 7 தடவைகள் வரை செய்யலாம்.

இந்த ஆசனம் பார்ப்பதற்கு சுலபமாக தோன்றினாலும் செய்வதற்கு அவ்வளவு எளிதாக வந்து விடாது. சிலருக்கு என்ன செய்தாலும் மிகவும் அடிப்படையான ஆசனமான பத்மாசனம் போடவே வராது. அவர்கள் பத்மாசனம் நன்றாக செய்ய வரும் வரை, சாதாரணமாக அமரும் முறையில் சுகாசனத்தில் உட்கார்ந்து, இரண்டு முழங்கால்களுக்கு மேல் இரண்டு உள்ளங்கைகளை வைத்து அழுத்திக் கொண்டு, முன்னுக்கு குனிந்து மூக்கு தரையை தொட முயற்சிக்க வேண்டும். இரண்டு கைகளையும் பின்னுக்கு கட்டிக் கொண்டு தொடவும் முயற்சி செய்யலாம்.

அல்லது சுகாசனத்தில் இரண்டு பெருவிரல்களை கைகளால் பிடித்துக் கொண்டு முன்னுக்கு குனியவும் செய்யலாம். இவைகள் எல்லாம் பத்மாசனம் வராதவர்களுக்கு தான். ஆனால் இடையிடையில் பத்மாசனமும் போட்டு பழக வேண்டும். பிறகு முன் சொன்னது போல் பத்மாசனத்திலிருந்தே குனிய முயற்சி செய்ய வேண்டும்.

கைகளை குதிகாலின் மீது வைத்துக் கொண்டும் குனியலாம். கைகளை குதிகாலின் மேல் வைத்துக் கொண்டு குனிவது கடினமாக இருந்தால், பின்னுக்கு கைகளை கட்டிக் கொண்டு குனியலாம். சில நாட்களுக்கு பின் கைகளை குதிக்கால்களின் மேல் வைத்துக் குனியலாம். பத்மாசனம் போட்ட படி குனிவதால், கால்கள் ஒன்றை ஒன்று அழுத்தி முதலில் வலிக்கும். நாளடைவில் பழக்கமானால் வலி இருக்காது. சிலருக்கு முன்னுக்கு குனிந்து மூக்கைத் தரையைத் தொட முயற்சி செய்யும் போது பிருஷ்ட பாகம் தூக்கிக் கொள்ளும். அப்படி நேராமல் அழுத்தமாய் தரையில் உட்கார்ந்து பழக வேண்டும்.

சிலருக்கு தொடை பகுதி அதிக சதைகளுடன் மிகவும் பெரிதாக இருக்கும் போது அவர்கள் முன்குனிந்து தரையைத் தொட கடினமாக இருக்கும். சிலருக்கு வயிறு கொழுப்பு சேர்ந்து தொப்பை விழுந்து இருப்பதாலும் முன்குனிய முடியாது. அவர்கள் எல்லாரும் மற்ற ஆசனங்களுடன் யோக முத்திரவையும் முயற்சி செய்து வந்தால், நாளடைவில் வயிறு, இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் உள்ள சதை, நரம்புகள் இளக்கம் பெற்று யோக முத்திரா செய்வதற்கு எளிதாகும். இந்த ஆசனம் செய்ய செய்ய தொப்பை பெருமளவு கரைந்து விடும். வயிற்றை சுற்றி உள்ள கொழுப்பு தான் சர்க்கரை நோய்க்கான அடிப்படை காரணம் என்று தற்போது சொல்கிறார்கள்.

இந்த வயிற்றை சுற்றிய கொழுப்பை யோக முத்திராவில் எளிதில் கரைத்து, தொப்பையை போக்கி மிகவும் இளமையுடன் காட்சியளிக்க முடியும். தொப்பை கரைவதால் மிகவும் சுறுசுறுப்பு வந்து சேரும். சிலர் ஒல்லியாய் இருப்பார்கள். இவர்களுக்கு தொப்பையும் இருக்காது. ஆனால் இவர்களுக்கும் யோக முத்திரா செய்ய சுலபமாக வராது. காரணம், இவர்களது முதுகுஎலும்பு கட்டை பாய்ந்து இருக்கும்.

அதாவது, குனிந்து நிமிரும் உடற்பயிற்சிகளே இல்லாத காரணத்தால் முதுகுஎலும்பு வளைய முடியாமல் கட்டை போன்று திடமாக காணப்படும். இவர்களும் தொடர்ந்து யோக முத்திராவை பயிற்சி செய்யும் போது நன்றாக வளைந்து தரையை தொட முடியும்.
யோக முத்திராவால் முதலில் மூக்கை வைத்து தரையை தொடுவதும்,பின்னர் வாயால் தரையை தொடுவதும் என்று நன்றாக பழக்கமான பிறகு அதே நிலையில் 20 எண்ணும் வரை இருக்க வேண்டும். யோக முத்திரா முழுமையான நிலையில் சாதாரணமாக மூச்சை இழுக்கவும், விடவும் செய்யலாம்.

குறிப்பு;   யோக முத்திராவை வழக்கமாய் செய்யும் பெண்கள் கர்ப்பனமானால் இரண்டு மாதங்கள் வரை தான் செய்ய முடியும். அதன்பின் கைகளை வயிற்றின் குறுக்கே வைக்காமல் 1 மாத கால அளவிற்கு செய்யலாம். இந்த காலத்திற்கு மேல் கர்ப்பமான பெண்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது. மிகவும் முக்கியமாக கர்ப்ப காலத்தில் இந்த ஆசனத்தை பழகவே கூடாது. பத்மாசனத்தில் மட்டும் உட்காரலாம்.

  • Share:

You Might Also Like

0 comments