மூச்சை அறிந்து முழுவதும் வாழ்

By sivaprakashThiru - April 09, 2019

மூச்சை அறிந்து முழுவதும் வாழ்

இருபது வயதிற்கேயுண்டான சலனங்களிலும், குழப்பங்களிலும் நான் இருந்த போது ‘தியானத்தை’க் கண்டறிந்தேன். எண்ணங்களின் பிடியில் சிக்காமல் அமைதியைப் பெறுவதற்கு அது உதவும் என அறிந்திருந்தாலும் தியானம் அவ்வளவு சுலபமாக இல்லை சிதறியோடும், பயப்படுத்தும் சிந்தனைகளின் பின் செல்லாமல் .’மூச்சின்’ மூலம் அதாவது, ப்ரக்ஞையோடு மூச்சை உள்வாங்கி, வெளியேற்றினோம் என்றால் நாம் ஒரு சமனிலையை அடைய முடியும் என என் ஆசான் ஒரு நிகழ்வில் சொன்னபோது வியப்பும், நம்பிக்கையின்மையும் இருந்தது ‘மூச்சு’.ஓ.. நேரே நிமிர்ந்து அமர்ந்து மூச்சைக் கவனிப்பதன் மூலம் எண்ணங்களின், செயல்களின் சீண்டல்களைத் தவிர்க்க முடியும், அதுதான் பிரபஞ்சத்தின் மிகப் பெரிய சக்தி’ என்று அவர் சொன்ன போது முதலில் எனக்கு விலக்கம் தான் வந்தது.இயல்பாக நடக்கும் இச்செயல் ஒரு அற்புதக் கருவி என நம்ப மறுத்தேன்
ஒரு காலத்தில் அறியாத விடலையாய் இருந்தவன், ஆன்மீக உவமைகள் மேல் பற்றும் புரிதலும் இல்லாதவன், ஐந்து வருடங்களுக்குப் பிறகு,என் மூச்சைக் கவனிக்கத் தொடங்கினேன். ஒன்று சொல்ல விரும்புகிறேன்- நான் யோகி அல்ல, என் வழி நான் புரிந்து கொண்டுள்ள ஒன்று.
வெளிச்சத்தில் ஊதா நிறத்தில் ஒரு திராட்சையைப் போல் தோன்றும் இதயம்; கனத்த சிறகுகள் கொண்ட நுரையீரல்கள் ,அவை உட்செலுத்தும் உயிர் வாயு, அவை வெளியேற்றும் கரியமில வாயு, தொப்புள் கொடியிலிருந்து பிரிந்து தனி உயிரெனத் தோன்றும் அனைத்து உயிரிகளும், இறக்கும் வரை செய்யும் இந்தச் செயல் தன்னியல்பில் தான் நடக்கிறது. அதைப் பற்றிய கவனம் பெரும்பாலும் இருப்பதில்லை.
நம் உடலமைப்பின் அடித்தளம் உலகின் மகத்தான உணர்வின் பாற் பட்டது.பிராணனை சரிவரக் கவனித்து வருவதன் மூலம் நம்முடைய சக்திகளை அதிகரித்துக்கொள்ளமுடிமென என் ஆசானும், அவரைப் போன்றவர்களும் நம்புகிறார்கள்.எல்லாப் புதுப் புரிதல்களைப் போலவே இதிலும் வியப்பும், நம்பிக்கையின் வரையறைக்கு உட்படாத செய்திகளும் சொல்லப்பட்டாலும் இதன் மகிமை பெரியது. புகழ் பெற்ற ‘வோக்’ ஏடு இதைப் புது யோகா என்கிறது.
இரண்டு பில்லியன் வருடங்களுக்கு முன்னர் எதுவும் சுவாசிக்கவில்லை; கடல்களில் நீல நுண்ணுயிர்கள் பல்கிப் பெருகி ஒளியிலிருந்து சக்தியைப் பெற்றுக் கொண்டு உயிர்வாயுவை வெளியேற்றின.அந்த வாயுக்கள் அளவில் மிகவே இரும்பும்,சல்ஃபரும் அதை உள் அடக்க முடியாமல் சுற்றுப்புறத்தில் வெளியிட அதன் விளைவாக மீத்தேன் வாயு குறைவுபட்டு இந்த பூமி மூன்று பில்லியன் ஆண்டுகள் பனி உலகமாகத் திகழ்ந்தது.
பூமியின் இந்த வளிமண்டலம் ஒரேயடியாக பலவற்றை அழிக்கவில்லை. சிறிது சிறிதாக இந்த மாறுதல்கள் நடந்தேறின.அதிக சக்தியால் நம் முதல் மூதாதையான பாக்டீரியாஉயிரினம், இழைமணிகளில் இந்த வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டது.பெருகும் திசுக்களின் பரிணாமத் தோற்றம், யூக்கிரியோட்டாக்கள், மேம்பட்ட உயிரினம் என பரிணாம வளர்ச்சியின் படிவங்களைச் சொல்லலாம்.
ஆக்சிஜன் அதிகமாகத் தேவையற்ற உயிரிகள் கடலின் அடிக்குச் செல்ல கடற்பாசிகள் அனிமெலஸ்,மெல்லுடளிகள்,செவுள்கள் நுரையீரல்கள் வந்தன. காற்று மாற்றுச் செயல்பாடுகள்,மெது மெதுவே கடலிலிருந்து நிலத்திற்குப் பெயர உதவின.பாலூட்டிகளுக்கு சக்தி மையமாக நுரையீரல்கள் அமைந்தன.மூச்சை உள்ளிழுக்கையில், உதர விதானம் கீழ் நோக்கி தட்டையாக, விலா தசைகள் மேல் நோக்கி இயங்க காற்றுப் பைகளுள்ள நுரையீரல்கள் விரிவடைகின்றன.விரிவடைவதால் உள்ளே காற்றின் அழுத்தம் குறைய வெளிக்காற்று உள்ளே புகுகிறது. அல்வியோல்லிகள் என்பவை பலூனைப் போன்றவை.அது லட்சக்கணக்கில் பாலூட்டிகளின் நுரையீரல்களில் உள்ளது. அது தனது முடிவற்ற சன்னமான சுவர்களின் மூலமாக சிவப்பு அணுக்களின் புரதமான ஹீமோ குளோபினுக்கு உயிர் வாயுவைக் கொடுக்கிறது.எப்போதுமே பசித்திருக்கும் திசுக்கள் இந்தப் புரதத்தை வளர்ச்சிக்காக ஆவலாக எடுத்துக் கொள்கின்றன. மூச்சை வெளிவிடுகையில் இதே முறை தலைகீழாக நடக்கிறது.கரியமில வாயு அசுத்தங்களை எடுத்துக்கொண்டு வெளியேறுகிறது.
பாலூட்டிகளின் மூச்சுச் செயல்பாட்டில் குரல்வளை முக்கியp பங்காற்றுகிறது.ஹோமோ சேப்பியன்களின் குரல் வளை கழுத்திற்கு கீழே அமைந்து அவனை மற்ற பாலூட்டும் இனங்களிலிருந்து பிரித்து பேச வைத்தது.மாறுபடும் சூழல்களுக்கேற்ப மனித இனம் தன் சுவாசத்தை மாற்றிக்கொண்டது. தென்கிழக்கு ஆசியாவின் கடல் நாடோடிகளின் மண்ணீரல் அவைகளுக்கு நீண்ட நேரம் சுவாசத்தை உள்ளிழுத்து நிறுத்துவதற்கு உதவுகிறது.
பலமுறை பல அறிவியலாளர்களும் தத்துவவாதிகளும் முயன்றும் சுவாசிக்கும் அற்புதத்தைப் பற்றிய ஒரு அறிமுகம்1660-ல் தான் கிடைத்தது. காற்றற்ற அறையில் அடைபடும் உயிரினம் இறந்து போகும் என்பதை ராபர்ட் பாயில் நிரூபித்தார். பிரெஞ்சுப் புரட்சியின் போது தூக்கிலிடப்பட்ட அன்டொனியோ-லாரண்ட் டி லாவோயிஸ் நாம் சுவாசிப்பது பிராண வாயு எனக்கண்டறிந்து அதற்கு ‘ஆக்சிஜன்’ எனப் பெயரிட்டார் 1870-ல் எட்வர்ட் ப்ளுப்கர்,செல்லகத்தில் தான் உயிர்வாயு உபயோகிக்கப்படுகிறது என நிரூபித்தார்.நாம் நீல நுண்ணுயிர்களுக்கு நன்றி சொல்ல மறந்து சுவாசித்துக்கொண்டு இருக்கிறோம்!
நாம் சுவாசிப்பதை அறிந்து செய்வதில்லை.உறங்கும் போதும், விழித்திருக்கும் போதும் இடையறாத செய்கை அது.ஆனால். மூச்சைக் கவனித்து வந்தோமென்றால் அது நம் மொத்த உடலுக்கும் எப்படி பயனளிக்கும் என்று பார்க்கலாம்.
மூச்சை வழிமுறைப் படுத்துவது சுலபம். ஜோஹன் க்ரேய்ப் தன்னுடைய சுயசரிதையில் டச் கால்பந்தாட்டக் குழுவினருக்கு மூச்சை உள்வாங்கி வெளியிடும் பயிற்சிக்கென ஒபரா பாடகரைக் கொண்டு பயிற்சி அளித்ததாகக் குறிப்பிடுள்ளார்.அது உண்மையே!ஆழமாகவும், மெதுவாகவும் உள்செல்லும் வாயு, தமனிகளை, இதயத்தை,மிகப் பாதுகாப்பான முறையில் இயங்கச் செய்கிறது. இது உடலை மிகப் பயன்படுத்தும் விளையாட்டுக்களில் இன்றியமையாதது.
சுய உதவி பயிற்றுவிக்கும் டோனி ராபின்ஸ் ‘உன் மூச்சை அறிந்து கட்டுப்படுத்தவும், நிலை நிறுத்தவும்,வேகப்படுத்தவும் நீ அறிந்து கொண்டால் உன்னை வெல்லும் சக்தி என ஒன்றில்லை’ என்கிறார்.நம் மூச்சை நாம் கவனித்து ஆள்வதற்கும், நம்முடைய மேம்பட்ட சிந்தனைகளுக்கும் இருக்கும் தொடர்பினை கீழைச் சிந்தனை வலியுறுத்தியே வந்துள்ளது.நம்முடைய இந்த அனிச்சை செயல்பாட்டில் நம் கவனம் குவியக்குவிய நம் அறிவுத்திறன் மேம்பட்டு,பௌதீக நிலையைக் கடந்து அபௌதீக நிலையை அதாவது மீபொருண்மையை அடைகிறோம்.
‘உணர்தல் கூடிய சுவாசம் உள்ளவன் உள்ளொளி மிக்கவன்’ என்று 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சூஃபி ஞானி பஹாஉத்புதின்புகாரி சொல்கிறார். தாவோக்களின் நூல் ஜூவாஞ்சி(ZHUANGZI)’சாதாரண மனிதர்கள் கழுத்தினாலும், ஞானிகள் முழு உடலாலும் சுவாசிக்கின்றனர்’என்று சொல்கிறது. நான் சந்தித்த என் ஆசான் புத்தர்களின் பாதையில் செல்பவர். 16 வகையான மூச்சுப் பயிற்சியை புத்தர் தனது ‘அனப நாஸ்தி சுத்தா’ உரைக்கோர்வையில் தியான மூச்சு முறைகள் என்று சொல்கிறார்.இடையறாது அலைக்கழிக்கும் வாழ்வில் மூச்சு ஒரு நங்கூரமென செயல்பட்டு மனிதனைக் காக்கிறது.கவனம் ஒன்றில் குவிய கவலைகள் மறைய,ஆற்றல் வளர்கிறது.
‘ப்ராணாயாமா’ எனப்படும் மூச்சுப் பயிற்சி, யோகாவின் எட்டுக் கரங்களில் பின்பற்றத்தக்கதும், சுலபமானதுமாக இருக்கிறது.உணர்வுடன் இயைந்த மூச்சு நிலை அது.தரையில் பாய் விரித்து, சப்பணமிட்டு அமர்ந்து,பின்னர் தொடைகளின் மேல் கால்களை குறுக்காக அமர்த்தி, வலது கை கட்டைவிரலைக் கொண்டு மூக்கின் ஒரு துவாரத்தை மூடி மறு துளையின் வழியாக நிதானமாக மூச்சினை உள்ளிழுத்து செய்யப்படுகிற யோகா அது. அந்தச் செயல்பாட்டின் போது,உதரவிதானம், விலா தசைகள், கீழ் வயிறு, மார்பகம், குரல்வளை, நெற்றி நடு என காற்று செல்வதை பின்னர் வெளியேறுவதை உணரலாம். பின்னர், திறந்த மூக்குத்துளை கட்டைவிரலால் இலேசாக அழுத்தப்பட்டு முன்னர் மூடப்பட்ட துளை திறக்கப்பட்டு தொடர்ந்து இதைச் செய்ய வேண்டும். ப்ராணாயாமம், நாடிசுத்தி, ப்ராம்மரீ என்று பலவகை மூச்சுப் பயிற்சிகள் உள்ளன.இத்தகைய உணர்தல் பூர்வமான மூச்சு நம்மை உள்முகமாக்குகிறது.அத்தகைய வசியப்படுத்தக்கூடிய,,ஆச்சர்யமான நிலையை இது உருவாக்குகிறது.உலகிற்கு கீழைச் சிந்தனை மற்றும் வாழ்வியல் முறைகள் கொடுத்துள்ள மாபெரும் கொடை இது.டோனால்ட் ட்ரம்பிடம் அமெரிக்கத் தேர்தலில் தோல்வியுற்ற ஹில்லாரி கிளிண்டன், யோகாவின் மூச்சுப் பயிற்சி அந்த மன அழுத்தத்திலிருந்து வெளி வர உதவியதாகக் கூறியிருக்கிறார்.(ட்ரம்ப் வெற்றி பெற்றதற்காக உலகே இப்போது மூச்சுப் பயிற்சியில் உள்ளது!)
இறப்பை விரும்புபவர் யாரும் இல்லை.தன் மரபணுக்களை வீர்யத்துடன் விட்டுச் செல்ல விரும்புவது அனைத்து உயிர்களுக்கும் இயல்பானது.வாழ ஆசைப்படுவது நம்முடைய மைய நரம்பின் செயல்பாட்டினால். தானியங்கும் அவைகள் செய்திகளை சுற்றுவட்டார நரம்பமைப்பிலிருந்து பெறுகின்றன. நொடிக்குள் மூளைக்குச் சென்று, கட்டளைகள் பெற்று முடிவெடுத்து செயல்படும் இவற்றிற்கும் உணர்ந்து மூச்சு விடுவதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.தானியங்கி நரம்புகளை மேலும் இரு பிரிவாகப் பிரிக்கலாம்.அனுதாப்ப்படும் ஒன்று,பரிஉணர்வு மற்றொன்று.இதயத்தின் 1-2 துடிப்பிற்கு பகையுணர்வு கொண்ட இவைகளே காரணம்.நம்முடைய பல வழக்கமான செயல்பாடுகள்,அனுதாப நரம்புகளால் அமைகிறது.இக்கட்டான சூழ்னிலைகளில் ‘செய் அல்லது ஓடு’ என இவைதான் சொல்கின்றன.
சூழலில் வாழ்க்கைச் சவால்கள் இல்லாத போது பரிந்துணர்வு நரம்புகள் செயலாற்றுகின்றன.சிந்தனை குறைந்து, கவனம் குவிகிறது.இந்த நரம்பின் செயல்பாட்டிற்கு முக்கிய பங்கு ‘நாடோடி நரம்பு’க்கானது.உடலின் தானியங்கும் வலைப்பின்னலில் மூளைத் தண்டிலிருந்து, பல உறுப்புக்கள் வழியாக வயிறு வரை செல்லும் இந்த நாடோடி நரம்புகளின் கிளை நரம்புகள் நம் குரல் வளையுடன் சேர்ந்த மூச்சுக்குழாயில் உட்புகுந்து ‘அமைதிப்படுத்தும் பணியையும் செய்கின்றன.அது அவ்வாறு செயல்பட ப்ரக்ஞை பூர்வமான மூச்சு இன்றியமையாததாகிறது.காற்றின் மொழியை உணரும் தானியங்கி மைய நரம்புகள் பரிந்துணர்வு நரம்புகளை நம்மை அமைதிப்படுத்தவும், ஆற்றுப்படுத்தவும் அனுமதிக்கிறது என்பதை 2007-ல் எலியிடம் செய்த பரிசோதனையில் அறிவியலாளர்கள் கண்டறிந்தார்கள்.
ஆழ்ந்த சுவாசம் என்பது இந்த உலகத்தின் முதல்உத்தி என்றே சொல்லலாம். இன்றும்கூட மேடைப் பேச்சு போன்ற செயல்களில் அறியாமலேயே பேச்சாளர்கள் ஆழ்ந்த மூச்சு எடுத்துக்கொண்டு தொடங்குவதைப் பார்க்கிறோம்.உள்ளுணர்வால் செய்யப்படும் இதை, உணர்வு பூர்வமாக அறிந்து செய்தால் கிடைக்கும் பலன் அதிகம்.
‘ஐரோப்பிய சுவாசக் கூட்டு’ ஒரு நிமிடத்தில் ஆறு முதல், பத்து சுவாசம் எடுப்பது சிறந்தது என்று சொல்லியிருக்கிறது. யோகாவில் நிதானமாக, ஆழமாக,மூச்சைக் கட்டுவதாக,உந்தியை மேலெழும்பச் செய்வதாக, மார்பை முன்னோக்கிக் கொணர்வதாக, வாயால் சுவாசம் விடுவதாக, செவிகளை ஒரு விரல் கொண்டு அடைத்து காற்றை தொண்டைக்குழிக்குள் சுழற்றுவதாக பற்பல மூச்சுப் பயிற்சிகள் உள்ளன.மூச்சை உள்ளிழுக்கையில் மேற்கூறியவாறும், வெளிவிடுகையில் அதற்கு மாறுபட்டதாகவும் இந்தப் பயிற்சிகள் இருக்கின்றன.தொடர்ந்து செய்கையில் அவை உள்ளொளி கொணரலாம், உங்கள் தோற்றம் பொலிவுபெறலாம்.
உணர்வு பூர்வமான மூச்சு என்பது முழுதும் அறிவியல் ஆய்வுகளுக்கு உட்பட்டதில்லை.ஆனால், ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது-அறியும் சுவாசம் உடற்கூற்றின் நிலையை, செயலை செம்மைப்படுத்துகிறது. யோகா மூச்சுப் பயிற்சியின்படி ‘அறியப்பட்ட அல்லது உணரப்பட்ட சுவாசம் இரத்த அழுத்தத்தை, நீரிழிவு நோயை, மூச்சிரப்பை, மனப்பிறழ்வை, தொடரும் தீராத வலிகளை எதிர்த்து செயல்பட உதவுகிறது. கவனச் சிதறல், படபடப்பு போன்றவை மறைகின்றன.கற்கும் ஆற்றலும், நினைவும் பெருகுகின்றன.கவலைகளையும், மன அழுத்தத்தையும் போக்கும் அருமருந்து இது.பலத் தகவல்களை, அறிவியல் ஆதாரங்களுடன் சொல்ல இயலாததென்றாலும், ‘நலமாக’ இருக்க இது ஒரு நல்வழி என்பதை உலகம் ஒத்துக்கொண்டுள்ளது.
திபெத்தியன் புத்த மார்க்கத்தில் ‘கனவின் யோக நிலை’ மாயையை அறிந்து கொள்ள உதவுகிறது.பிரக்ஞை உள்ள சுவாசம் என்பதின் வீர்யத்தை, அதன் நலன்களை யோக முனிவர்கள் அறிந்துதான் அதை உயிர் ஆற்றல் எனக் கொண்டாடினார்கள்.வலது நாடி சூர்யக்கலை என்றும் இடது சந்திரக்கலையென்றும்,படுத்துக்கொள்கையில் வலப்புறம் படுத்துக்கொள்ளவேண்டுமென்றும் சொன்னவர்கள், இதயத்தை, நுரையீரல்களை, குரல் வளைகளை,அமைத்திப்படுத்தும் ஆற்றல் மையங்களை அறியாமல் சொல்லவில்லை.
ஆழமாகவும், மெதுவாகவும் மட்டுமே மூச்சுப் பயிற்சிகளை முன்னோர்கள் சொல்லவில்லை. ‘கபால பாத்தியில்’ மூச்சின் வேகம் கூடும்.’குண்டலினி யோகா’வில் மூச்சை நிலை நிறுத்த வேண்டும்-அதாவது சுவாசிப்பதை நிறுத்தி பயிலுதல்.1837-ல் ஒரு துறவி 40 நாட்கள் உயிருடன் புதையுண்டு உயிரோடு எழுந்தார். இன்றும் நம் மகான்களின் சமாதிகளில் அவர்கள் புதையுண்டிருந்தாலும் உயிரோடு இருக்கிறார்கள் எனக் கேள்விப்படுகிறோம். ஆச்சர்யகரமான, மயக்க, கருமூச்சு நிலை இது. இதில் ஈடுபட்டவர்களின் மூக்குத் துவாரத்தில் ஒரு இறகினை காட்டினாலும் கூட அது அசையாது. மூச்சு ஸ்தம்பனம்.பாலியல் இன்பங்களை மாற்றி வாழ்நாளை நீட்டிக்கச் செய்து மரணமில்லாப் பெரு வாழ்வு வாழும் நிலை இது.
ஆழ்ந்த, நிதானமான சுவாசத்திற்கு எதிரான ‘கபால பாத்தியில்’ நாம் வேகமாகவும், சப்தத்துடனும் சுவாசிக்கிறோம். இது உடலில் நஞ்சினை நீக்குகிறது.இந்தக் கருது கோள்களை கேள்விகளுக்கு உட்படுத்துவது என்பது இயல்பே. ஆனால், விம் ஹோப் என்ற அதி அழகிய வீராங்கனை எம்முறை சுவாசப் பயிற்சிகளும் உடலின் தற்காப்பை மேம்படுத்துகிறது என்று நிரூபித்துள்ளார்.
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் அல்லவா?உடலிற்கு எத்தனை ஆக்ஸிஜன் தேவை என்பதை உடலே தீர்மானிக்கிறது.வாழ்விக்கும் உயிர்வாயுவின் ஒருஅணுத்திரள் அதிகமானாலும் அது நஞ்சாக மாறுகிறது.’Comprehensive Physiology’ சொல்கிறது ‘திசுக்களில் கூட்டப்பட்ட ஆக்ஸிஜன் அழுத்தம்’ மரணத்தில் முடிகிறது என்று.
அறியாமலே அனைவரும் மூச்சு விட்டுக்கொண்டு தான் இருக்கிறோம்; அதை கவனித்து செய்யச் சொல்லும் போது, அதன் பயன்களாக பலவற்றைச் சொல்லும் போது, ஒரு விலக்கம் வந்தாலும், நடைமுறையில் இதை செய்து வழிகாட்டியவர்களின் அனுபவங்கள் நம்மை இவ்வழியில் போகச் செய்யலாம்.
தியானத்தை தொடர்ந்து செய்யாதிருந்த போதிலும், உள்ளுணர்வால் இந்த மூச்சுப் பயிற்சி என் அன்றாட வாழ்க்கையில் மிகத் துணை புரிகிறது.தியானத்திற்கு செல்ல வேண்டும் என்று எண்ணம் எழுந்தாலும், என் கூப்பாடு போடும் எண்ணங்களும், அமைதியின்மையும், அவசரமும் மூச்சினால் கட்டுக்குள் வருவதை உணர்கிறேன்.என் இருப்பின் முன்னோடிகளான இழைமணி யூக்கரியோட்டாக்களின் நினைவு, அதன் பரிணாமவளர்ச்சி, சிக்கலான மேம்பட்ட உயிரினம் இதைப் பற்றி நினத்து என் மூச்சை அடிவயிற்றிடம் கொண்டு சென்று கூச்சலிடும் எண்ணங்களை வெளியேற்றிவிடுகிறேன்.என் உடல் இறப்பிலிருந்து என்னைத் தள்ளி நிற்கச் செய்யுமென்றால், மேலே எழும்பும் கூக்குரலை விட்டு நான் இந்த ப்ரக்ஞையில் ஈடுபடுவதும் சரியே!
உண்மையில் சொல்லப் போனால்,சுவாசத்துடன் தொடர்பு கொள்வது என்பது நம்மிடம் உள்ள முக்கியமான விலைமதிப்பற்ற ஒன்றுடன் தொடர்பு கொள்வது என்பதே!உலகில் உயிர் தங்கும் இடம் நம் உடலல்லவா?’உடம்பார் அழியின் உயிரார் அழிவார் அல்லவா?’ ஆழ்ந்த சுவாசத்தால் நுரையீரல்களை நிரப்புங்கள்;கபால பாத்தியும், குண்டலினியும்,நாடி சுத்தியும், ப்ராணாயாமமும் கெடுதல் செய்வதில்லை; மாறாக நன்மைகள் ஏற்படுவதை உணர்வோம்.ஆதியிடம் தொடர்பு கொள்வோம்; தேவையான உயிர் வாயுவை எடுத்துக் கொள்வோம்.
வாசி, வாசி என்று பழகி சிவாவை அடைந்துவிடு என்று சொல்லும் வழக்கம் தமிழ்நாட்டில் உண்டு.வாசி என்பதே மூச்சுப் பயிற்சி.சிறுமூளைக்கும் பெருமூளைக்கும் நடுவில் ஐந்து காரணிகளின் அழுக்கு சேர்கிறது. குண்டலினி அங்கே சூழ்கையில் மாசுகள் அகல்கின்றன. வாசி யோகம் ஜீவனுக்குத் தரும் சிவ யோகம் என நம்பப்படுகிறது.
“சாற்றும் சன்மார்க்கமாய் தற்சிவ தத்துவத்
தோற்றங்களான சுருதிச் சுடர் கண்டு
சீற்றம் ஒழித்துச் சிவயோக சித்தராய்க்
கூற்றத்தை வென்றார் குறிப்பறிந்தார்களே”
“புல் நிசப்தமாக அமர்ந்திருக்கிறது
எதுவும் செய்யாமல்
வசந்தம் வருகையில்
தானே வளர்கிறது” என்று ஒரு ஜென் கவிதை உள்ளது
மூச்சும் நிசப்தமாய் இயங்குகிறது . அது
செய்வது என்ன என்று நாம் உணர்வதில்லை
ப்ரக்ஞை வருகையில்
உடலோடும் உயிரோடும் அமைகிறது.
பிரித்தானிய கொலம்பியா பல்கலையில் மூதறிஞர் பட்டம் பெற்ற திரு எம்.எம்.ஓவன் சுவாசத்தைப் பற்றி கட்டுரை எழுதினார். அதை திரு போ வெண்ட்ரப் மொழி பெயர்த்துள்ளார். கட்டுரை ஏஇயோன் இதழில் வெளிவந்துள்ளது. இதை சொல்வனத்திற்காக தமிழில் மொழி பெயர்த்திருந்தாலும் நாம் அறிந்த மூச்சுப் பயிற்சிகளும், திருமந்திரமும், ஜென் கவிதையும் உடன் இடம் பெற்றிருக்கின்றன.


மூச்சை அறிந்து முழுவதும் வாழ்


  • Share:

You Might Also Like

0 comments