உங்கள் வீட்டுப் பிள்ளை game விளையாடுவதில் கில்லாடியா

By sivaprakashThiru - March 31, 2020

உங்கள் வீட்டுப் பிள்ளை game விளையாடுவதில் கில்லாடியா....
சற்று இப்பதிவை வாசியுங்கள்!!!


     உங்களுக்கு ஞாபகம் உள்ளதா? கிட்டிப்புல் , கிளித்தட்டு , ஒளிந்து விளையாடுதல் , பிட்டு என்று பிள்ளைகள் வயலோரங்களிலும் தெரு ஓரங்களிலும் குதூகலமாக ஓடியாடித் திரிந்த காலம் இருந்தது. இப்போதெல்லாம் சிறுசுகளின் விளையாட்டு வீட்டோடு காதோடு காது வைத்தது போல் முடிந்து விடுகிறது. இன்றைய பெற்றோர்களும் அதை தங்களுக்கு சாதகமாக எண்ணி திருப்பி அடைகின்றனர். சில சமயங்களில் "என்னோட பிள்ளயென்டா சாந்தமா வீட்டிலேயே இருந்துடுவான்" என பெருமை பாராட்டுவதையும் நாம் பார்த்திருக்கிறோம். ஆனாலும் , அதிலுள்ள தாக்கங்கள் குறித்தும் மற்றும் அது பிள்ளையின் வளர்ச்சியும் விருத்தியும் பாதிக்கும் விதங்கள் தொடர்பிலும் அவர்கள் அதிகமாக சிந்திப்பதே இல்லை.


அதிலும் பிரதானமாக தொழில்நுட்ப விளையாட்டுக்களில் நம் சிறுசுகளின் சிந்தனையும் நடைமுறையும் சிக்குண்டிருப்பதை அவதானிக்கலாம். இது ஒரு பொழுது போக்கு தான். ஆனால் இதனுடனான தீவிரமான ஈடுபாடு ஒரு வியாதியாக மாறிவிடுகிறது என்பதை பல பெற்றோர்கள் அறிவதில்லை. உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் அவர்களை அறியாமலே இதற்கு அடிமையாகியுள்ளனர்.

     இதனை ஆங்கிலத்தில் Video game addiction , Gaming disorder , Internet gaming disorder , Problematic online gaming என்று அழைப்பர்.
இதுதொடர்பாக வரைவிலக்கணம் செய்யும்போது ICD 11 எனப்படும் நோய்களுக்கான சர்வதேச தரப்படுத்தல் ஆவணத்தின் பதினோராவது பாகத்தில் பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்தியுள்ளது.

ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் விளையாடும் விளையாட்டுகள் வழமையான வாழ்வில் கட்டுப்பட்டு வாழும் நடத்தையாகும். தனக்கு எதிர்மறையான தாக்கங்கள் ஏற்பட்டாலும் அதனை தொடர்வதிலும் , அதனை விருத்தி செய்வதிலும் ஏனைய விடயங்களை விட முன்னுரிமை வழங்கும் முறையாகும் என வரையறுக்கிறது.

இது ஒரு ஆபத்தான நிலையாகும். இதன் விபரீதம் தொடர்பில் கூறுகையில் , 'அதிக நேரம் வீடியோ கேம் விளையாடிக் கொண்டே இருப்பதால் சிலருக்கு கேமில் வரும் உலகத்திற்கும் நிஜ உலகத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் போகிறது. இதனால் நிஜ உலகிலும் தங்களுக்கு விசேடமான சக்தி இருப்பதாக உணர்கிறார்கள்' என்கிறார் அகிஃபா மரியம் சித்திக் எனும் உளவியல் நிபுணர் கூறுகிறார் .
மேலும் இதற்கு அடிமையாகிய பிள்ளைகள் மத்தியில் கல்வி பின்னடைவு , உறவுகளை தொடர்வதில் கடினத்தன்மையை உணர்தல் , ஆத்மிக - ஆன்மீக உறவுகளை தக்கவைக்க முடியாமை , மனச்சோர்வு உண்டாகுதல் , கோபம் மற்றும் வன்முறை நடத்தை வெளியாகுதல் போன்ற பல்வேறுவிதமான தாக்கங்கள் உருவாகின்றன. மேலும் கதிர்வீச்சுக்களின் தாக்கம் மற்றும் பாலியலில் ஈடுபாடற்ற தன்மை ஏற்படல் போன்ற உடலியல் அபாயங்களும் இதில் இருப்பதை மறுப்பதற்கில்லை.

     உங்கள் பிள்ளைகள் கேமிற்கு அடிமையாகியவரா என்பதை அடையாளம் காண்பது அவசியமாகும். அவற்றை அடையாளம் காண்பதற்கு American Psychiatric Association 9 குணங்குறிகளை பட்டியலிடுகிறது.

▪ நாள் முழுவதுமாக கேம் தொடர்பான யோசனையும் சிந்தனையும் தொடர்ந்து காணப்படும். பொதுவாக அவர்கள் பேசுவது மற்றும் சிந்திப்பது இது தொடர்பாகவே அமையும்.

▪ கேம் விளையாட கிடைக்காத போது கோபம் / கவலை / துக்கம் / பதகளிப்பு உணர்வு போன்றன காணப்படும்.

▪ அதிகமான நேரங்களை கேம் விளையாடுவதிலேயே செலவிடல். விளையாட்டில் திருத்தி அடைவதற்கு அதிக நேரம் எடுத்தல்.

▪ தான் இதிலிருந்து வெளியேற முயற்சி செய்தாலும் அவை வெற்றி பெறாமல் இருத்தல்.

▪கேமினை தவிர்ந்த ஏனைய பொழுதுபோக்குகளில் ஆர்வம் இல்லாமல் போதல்.

▪ தனக்கு பாதிப்புக்கள் உள்ளதாக தெரிந்தாலும் அதனை தொடர்தல்.

▪ வீட்டு உறுப்பினர்கள் , மருத்துவர் , உளநல மருத்துவர்கள் மற்றும் ஏனையோரை பொய்களைக் கூறி ஏமாற்றி விளையாடுதல்.

▪ தனது கவலை , பதட்டம் , பிரயோசனமற்ற சுய உணர்வு , தனிமை போன்றவற்றை போக்குவதற்கான சாதனமாக தொடர்ந்து குறித்த விளையாட்டினை பயன்படுத்தல்.

▪ நாளாந்த வாழ்வில் கல்வி , தொழில் , உறவுகள் , ஆன்மீகக் கடமைகள் என்பவற்றில் பாதிப்பு ஏற்படும் வகையில் குறித்த செயல்பாடுகள் அமைந்திருத்தல்.

மேற்கூறிய குணங்குறிகளில் 5 அல்லது அதைவிட அதிகமான குணங்கள் ஏறத்தாழ 12 மாதங்கள் வரை நீடித்திருந்தால் நீங்கள் அவசியம் உங்கள் பிள்ளைகளை உள மருத்துவர் , உளவளத்துணையாளர்கள் போன்ற தொழில்வாண்மையான சிகிச்சை வழங்குநர்களிடம் அழைத்துச் செல்ல வேண்டும். இதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்படாத சமயத்தில் இன்னும் பல உள பிரச்சினைகள் விருத்தி அடைவதற்கு சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

பெற்றோர்கள் தம் பிள்ளைகள் தொடர்பான குறித்த மதிப்பீட்டுடன் செயல்படுவது இன்றைய தொழில்நுட்ப சூழலில் இன்றியமையாததாகும்.

மேலும் அடிமைப்படுதல்(Addiction) நிலையினை சிகிச்சை செய்வதற்கு பாதிக்கப்பட்டவரின் சுய விழிப்புணர்வு அதிகம் அவசியமாகிறது. அதற்கமைய இன்றைய தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் நடைபெறும் போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்குவது போன்று இக்குறித்த நிலைக்கும் முக்கியத்துவம் வழங்கி அதிகமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது அவசியமானதாகும்.

  • Share:

You Might Also Like

0 comments