ஆற்றல் மிகுந்த மனம்
- சி.ஆர். ரவீந்திரன்
ஷேக்ஸ்பியர் தன்னுடைய நாடகமான “பன்னி ரெண்டாம் இரவில்” ஃபெஸ்டே என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக ஒரு கருத்தைச் சொல்லுவார். “சிலர் பிறக்கும் போதே புகழுடன் பிறக்கிறார்கள். சிலர் தங்களுடைய சாதனைகளின் வாயிலாகப் புகழ் அடைகிறார்கள். சிலரின் மீது புகழ் திணிக்கப்படுகிறது.” இந்த மூன்று வகையில் சாதனை புரிந்தவர்கள் மட்டுமே உலக நன்மைக்காக உழைக் கிறார்கள் என்பது ஓர் எதார்த்தம். அவர்கள் தங்களுடைய சராசரியான வாழ்க்கைப் போக்கிலிருந்து மீறித் தன்னைக் காத்துக்கொண்டும், அழித்துக்கொண்டும் மனிதகுல மேன்மைக்கு உழைக்கிறார்கள். அந்த வகையில் தங்களுடைய வாழ்க்கையை அவர்கள் அர்த்தப்படுத்துகிறார்கள்.
ஒவ்வொருவருமே தன்னுடைய வாழ்க்கையை ஏதேனும் ஒரு விதத்தில் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதற்காகக் கடுமையாக உழைக்கிறார்கள். மனதில் ஓர் இலக்கைத் தீர்மானித்துக் கொண்டு அந்த வழியில் தொடர்ந்து பயணம் செய்கிறார்கள். சோதனைகள் நிறைந்த பாதையிலேயே அவர்கள் அவரவர் அளவில் அந்தப் பயணத்தை நிகழ்த்துகிறார்கள். இலக்கை நோக்கிய பயணத்தில் மிகுந்த ஆர்வத்துடன் படிப்படியாக முன்னேறுகிறார்கள். உலகில் பெரும்பாலானவர்கள் அந்தப் பயணத்தை முழுமை யாக்காமல் இடையிலேயே சோர்ந்து போய் வாழ்க்கையைச் சலித்துக் கொள்கிறார்கள். தளர்ந்த மனநிலையில் தங்களுடைய வாழ்க்கையைக் கழிக்கிறார்கள்.
முந்நாளில் தொடக்கப் பள்ளிப் பாடப்புத்தகத்தில் ஒரு சித்திரைக்கதை இருந்து வந்தது. சித்திரத்தைப் பார்த்துக் கதையையும் கருத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். அது தன்னியல்புச் சிந்தனையை வளர்த்துக் கொள்ள ஒரு வழிமுறையாக இருந்தது.
இதுதான் அந்தச் சித்திரைக்கதை : ஒரு திராட்சைத் தோட்டத்தின் பக்கமாக ஒரு நரி செல்கிறது. திராட்சைக் கொடிகள் படர்ந்த பந்தல். ஏராளமான பழக்குலைகள் அங்குமிங்குமாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அதில் இருந்த பழங்களை உண்ண வேண்டும் என்ற ஆசை நரிக்கு, குலைகளுக்குக் கீழே சென்ற நரி உயரத்தில் இருக்கும் அவற்றைக் கவ்வுவதற்காக மேல் நோக்கித் தாவுகிறது. மிக மிக உயரத்தில் இருந்த திராட்சைக் குலைகளை நரியால் கவ்வி இழுக்க முடியவில்லை. தொடர்ந்து முயற்சிக்கிறது. அது சாத்தியமில்லை. கடைசியில், ‘இந்தப் பழம் புளிக்கும்’ என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டு அதன் வழியே போய்விடுகிறது.
கதை எளிமையானதுதான்! நரி திராட்சைப்பழம் தின்னுமா என்ற கேள்விகூட எழலாம். எட்டாத ஒரு பொருளுக்கு ஆசைப் படக் கூடாது என்ற ஒரு கருத்தைக் கூட கதை உணர்த்துவதாக எதிர்மறையாகக் கொள்ளலாம்.
ஒவ்வொன்றுக்குமே இரண்டு பக்கங்கள் அல்லது கோணங்கள் உண்டு. வாழ்க்கையில் பெரும் பாலானவர்கள் தங்களுடைய அனுபவங்களின் ஊடாக எதிர் மறையான கருத்துக்களையே உருவாக்கிக் கொள்கிறார்கள். சலிப்புடன் வாழ்க்கையைச் சபித்த படி வாழ்கிறார்கள். கடைசிள்வரை அவர்கள் உடன்மறைக்கண்ணோட்டத்திற்குத் திரும்புவ தில்லை. விதியைக் காரணம் காட்டித் தன்வழியே முடிந்தவரை நடக்கிறார்கள். ஒவ்வொருவருமே தொடர்ந்து முன்னேற வேண்டும் என்ற மன உறுதியோடு பயணத்தைத் தொடரும்போது அவர்களுக்குள் விழிப்புணர்வு நிலை உருவாகும். அந்த நிலையில் ஒவ்வொரு தனிமனிதனும் சமூக மனிதனாக மாறவாய்ப்பு உண்டாகும். அவன் வாழும் சமுதாயத்தில் அவனை உள்ளடக்கிய ஒட்டு மொத்த அமைப்பே உயரும். மனித சிந்தனை உலக நன்மை குறித்து அதிக அளவில் அக்கறைப்படும். மனிதன் தன்னை உயர்த்திக் கொள்வதோடு அவன் வாழும் சமுதாயத்தையும் உயர்த்திக் கொள்வான்.
மனித சிந்தனை உயர்வை நோக்கியதாகவே இருந்து இயங்க வேண்டும். இதை வெளிப்படுத்து வதற்காகவே கோவில்களில் கோபுரங்களை உயர்த்திக் கட்டி யிருக்கக்கூடும் என்று தோன்று கிறது. மலைகளின், குன்றுகளின் உச்சிகளில் கோவில்களை அமைத்திருப்பதன் நோக்கம் கூட இதுவாகவே இருந்திருக்கலாம்.
மனிதனுடைய பார்வை உயர்வை நோக்கியதாக இருக்க வேண்டும்.
சோதனைகளைக் கடந்து சென்று அந்த உயர்வை அடைய வேண்டும். படிக்கட்டுகளின் வாயி லாக ஒவ்வொரு படியையும் கடந்து முன்னேறிக் கடவுளைக் காண வேண்டும் என்ற கருத்தும் இதில் உள்ளடங்கி உள்ளது. மலை உச்சியி லிருந்து சுற்றிலும் பார்க்கும் பொழுது வானத்தின் விரிவும், மண்ணின் விசாலமான பரப்பும் கண்களுக்குப் புலப்படுகின்றன. மனவெளி விரிவடைகிறது. ஒளிமய மாகிறது. தெளிவு பிறக்கிறது. இதைத்தான் நம் முன்னோர்கள் நமக்குச் சொல்லாமல் சொல்லி யிருக்கிறார்களோ என்று கருதத் தோன்றுகிறது. வாழ்க்கை நமக்குப் புதிய அர்த்தத்தைப் புலப்படுத்துகிறது.
வாசிப்பின் வாயிலாக நாம் அனுபவப்படாத சீர் உலகைக் காண்கிறோம். விரைவாக வாசிப்பது பெரும்பாலான வர்களின் இயல்பாகவும், பழக்கமாகவும் இருந்து வருகிறது. அவற்றில் பெரும்பாலானவை நினைவில் நிற்பதில்லை. தேவையானவை என்று கருதக்கூடியவை மட்டுமே மனதில் பதிந்து நினைவில் நிலைக்கின்றன. வாசிப்பில் ஆழ்ந்த ஈடுபாடு காட்ட வேண்டும். ஒவ்வொன்றையும் மன அளவில் காட்சிப்படுத்தி உணரவேண்டும். அந்த நிலையில் அவை மனதில் ஆழமாகப் பதிந்து தங்கிவிடும். பின்னாளில் அவற்றை நினைவுத்தளத்தில் வைத்தும் புதியவற்றோடு பொருந்திப் பார்த்து ஒருங்கிணைக்க முடியும் அந்த நிலையில், வளர்ச்சிப் போக்கு பழையவற்றுடன் புதியவற்றை இணைத்துக் கொண்டு தொடர்ந்து நிகழ்ந்தபடியே இருக்கும். காட்சிப்படுத்தி வாசிக்கும் பொழுது சிந்தனைகள் அவற்றின் தளங்களில் ஒருங்கிணைந்தும், முரண்பட்டும் இயங்க புதியவை பிறக்கும் இதுவே வளர்ச்சிப் போக்கு.
காட்சிப்படுத்தி வாசிப்பதைப் பற்றி நினைக்கும் பொழுது வியக்கத் தகுந்த ஒரு வரலாற்று நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. நெப்போலியனின் வாழ்க்கையில் நிகழ்ந்த அதை மறக்க முடியாது.
பிரான்ஸின் ஒதுங்கிய பகுதியில் இருந்த கார்ஸிகா என்ற ஒரு தீவில் பிறந்தவன் நெப்போலியன் போனவெர்ட், ஓர் எளிய போர்வீரனின் மகன். மிக மிக எளிமையான ஏழ்மையான குடும்பப் பின்னணியில் அவன் பிறந்திருந்தான். சிறுவனாக இருந்தபோது ஓர் இராணுவப் பள்ளியின் முன்னால் ஒரு பெண்மணி குழந்தைகளுக்குத் தேவைப்படும் திண்பண்டக் கடை ஒன்றை நடத்தி வந்தாள். வளமான குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் அந்தக் கடைக்குச் சென்று விரும்பியதை வாங்கித் தின்றுகொண்டிருந்தார்கள். வாங்கித்தின்ன எந்த வசதியும் இல்லாத நெப்போலியன் மற்றவர்களை வேடிக்கைபார்த்து ஏங்கியபடி கடையின் முன்னால் இருப்பார். பரிதாபப்பட்டு அந்தக் கடைக்காரப் பெண்மணி அவர் தின்பதற்கென்று அவ்வப்போது எதையாவது கொடுப்பது வழக்கம். அவனும் அதைப் பெற்றுக் கொண்டு தின்பான்.
அந்தக் கடைக்காரப் பெண்மணி ஒருநாள் நெப்போலி யனிடம் ஒரு கேள்வியைக் கேட்டாள். “தம்பி, நீ படிச்சு என்ன வேலைக்குப் போகப் போகிறாய்?” அதற்கு அவன் உடனடியாகப் பதில் சொன்னான்; “நான், பிரான்ஸ் நாட்டின் சக்கரவர்த்தியாகப் போகிறேன்!” அந்தப் பெண்மணிக்குச் சிரிப்புத்தாள முடியவில்லை. அடக்கிக் கொண்டே மீண்டும் கேட்டாள். “நீ சக்கரவர்த்தியானால் என்னை வந்து பார்ப்பாயா?”, “கண்டிப்பாக தவறாமல் வந்து பார்ப்பேன்!” அவன் பதில் சொன்னான்.
அந்தப் பெண்மணி வியப்புடன் சிரித்ததற்குக் காரணம் இருந்தது. பிரான்ஸ் நாட்டின் வரலாற்றில் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சக்கரவர்த்தியாக முடியும். அதுதான் அன்றைய உலகின் நடை முறை வழக்கம். அதை மீறுவது எந்த வகையிலும் எவருக்கும் சாத்தியமில்லை. ஒரு வேடிக்கை நிகழ்ச்சியாகவே அந்தப் பெண்மணி கருதினாள்.
நெப்போலியனின் வாழ்க்கை வரலாற்றை பிரெஞ்சுக்காரரான எமில் லூட்விக் எழுதியிருக் கிறார்கள். அதில் அவனுடைய இயல்பான பழக்கத்தை அவர் குறிப்பிடுவார். இராணுவம், போர்முறை பற்றிய புத்தகங்களை நெப்போ லியன் ஓயாமல் படித்துக் கொண்டிருப்பதைப் குறிப்பிட்டுச் சொல்வார். நெப்போலியன். தன்னுடைய மனவெளியில் போர்க்களங்களை உருவாக்கிப் போரிடும் முறைகளைக் கற்பனை யில் வடிவப்படுத்திக் கொண்டே இருப்பான். அந்தப் பயிற்சிதான் அவனை எல்லாப் போர் முனைகளிலும் வெற்றி பெறச் செய்தது. அதனாலேயே பின்னாளில் நெப்போலியன் சொன்னார். “என்னுடைய அகராதியில் முடியாது என்ற வார்த்தைக்கு இடமில்லை” அந்த அளவிற்கு நெப்போலியனுக்குத் தன்னுடைய முயற்சிகளில் தன்னம் பிக்கை இருந்தது.
பின்னாளில் நெப்போலியன் பிரான்ஸ் நாட்டின் வம்சாவழி வரலாற்றை மாற்றி அமைத்ததோடு மட்டுமல்லாமல் உலக வரலாற்றின் திசைப்போக்கையும் முழுக்க முழுக்க மாற்றி அமைத்தான்.
நெப்போலியன் பிரான்ஸின் சக்கரவர்த்தி யான பிறகு, தன்னுடைய வாக்குறுதியை நினைவில் வைத்திருந்தான். அந்தக் கடைக்காரப் பெண்மணியைத் தேடி அவன் கல்வி பயின்ற இராணுவப்பள்ளி இருந்த ஊருக்குச் சென்றான். அந்தப் பெண்மணி முதுமைப் பருவத்தில் அதே கடையை அப்படியே நடத்திக் கொண்டிந்தாள். நெப்போலியனை அவள் அடியோடு மறந்து போயிருந்தாள்.
பிரான்ஸின் சக்கரவர்த்தி அவளைப் பார்க்க வருவதாக அவளிடம் தெரிவித்தபோது அவள் பயந்து பதைபதைத்துப் போனாள். பரபரப்புடன் அவள் காத்துக் கொண்டிருந்தாள்.
நெப்போலியன் அந்தப் பெண்மணியைச் சந்தித்துத் தன்னை நினைவிருக்கிறதா என்று கேட்டான். பார்வை மங்கிய அந்தப் பெண்மணி அவனை மறந்து போய்விட்டதாகச் சொன்னாள். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டும் அவளுக்கும் அவளுடைய குடும்பத்தினருக்கும்
தேவைப்பட்டதைச் செய்தான். இது, நெப்போலி யனின் வாழ்க்கை நிகழ்வு.
மாமனிதனாக உலக வரலாற்றில் இடம் பெற்றான் நெப்போலியன்.
உலக அளவில் புகழ்பெற்ற மாமனிதர் களின் வாழ்க்கையில் இது போன்ற நிகழ்வுகள் ஏராளமாகவே உள்ளன. வாழ்க்கையில் உயர் வடைய வேண்டும் என்று உண்மையிலேயே விருப்பம் உடையவர்கள் அவரவர் தளங்களில் இலக்குகளை அடைவது இயல்பு. மனித மனம் அளவற்ற ஆற்றலை உடையது. அதை எந்த அளவிற்கு ஒருவர் வெளிப்படுத்துகிறாரோ அந்த அளவிற்கு அவர் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்.
சுவாமி விவேகானந்தர் மனித ஆளுமையைப் பற்றி அழுத்தமாக ஒன்றைச் சொல்லுகிறார். “எல்லா ஆற்றலும் உங்களுக்குள் அடங்கியிருக்கிறது. உங்களால் எதையும், எந்த ஒன்றையும் செய்ய முடியும். அதில் நம்பிக்கை வையுங்கள்.”
ஆற்றல் மிகுந்த மனம் தோல்வியைக் கூட வெற்றியாக மாற்றியமைக்கக் கூடியது. தோல்வி என்பது முயற்சியைக் கைவிடுவதால் மட்டுமே நிகழ்கிறது.
0 comments