முளைகட்டிய தானியங்கள்...!
ஒரு கைப்பிடி அளவு முளைகட்டிய தானியத்தில் ஏராளமான சத்துக்கள் இருக்கிறது. முழு தாவரமாக வளர்வதற்கான ஆற்றலை விதையிலிருந்து வெளிவரும் சிறு முளை கொண்டிருப்பதால், அதைவிட பலமடங்கு சத்து அதிகம் உள்ளது.
அன்றாடம் மற்ற உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்வதைப் போல முளைகட்டிய தானியத்தை நாம் கண்டு கொள்வதில்லை. உண்மையில், தாதுக்கள், வைட்டமின்கள், என்சைம்கள், ஆக்ஸிஜனேற்றிகள், அமினோ அமிலங்கள், ஃபோலேட், மெக்னீசியம், பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், நார்சத்து, தாமிரம், பீட்டா கரோட்டின், கால்சியம், மாவுச்சத்து, கொழுப்பு, மாங்கனீசு மற்றும் வைட்டமின்கள் சி, ஏ, கே என பலவகையான ஊட்டச்சத்துக்களின் பெட்டகமாக முளைகட்டிய தானியங்களைச் சொல்லலாம்.
எல்லா வகை தானியங்களையும் முளைகட்டி எடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு வகை முளைகட்டிய தானியத்திற்கும் பிரத்யேக நன்மைகள் உண்டு. உடல் தசைகளுக்கு வலிமையும், உடனடி ஆற்றலும் கொடுக்கக்கூடியது என்பதால், உடற்பயிற்சி செய்பவர்கள் காலையில் இதை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளலாம்.
இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் அன்றாட உணவில் எடுத்துக் கொள்ளலாம். எலும்பு வளர்ச்சிக்கும், ரத்த ஓட்டத்துக்கும், வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளின் தசைகளை வலுவாக்குவதற்கும் ஏற்றது முளைகட்டிய பச்சைப் பயறு.
முளைகட்டுவதில் என்ன நன்மை?
குறிப்பாக, இங்கு முளைகட்டும் செயல்முறைதான் இங்கு தானியத்தின் சத்து மதிப்பைக் கூட்டுகிறது. விதைகளை தண்ணீரில் ஊறவைக்கும்போது, அவை ஈரப்பதத்தின் காரணமாக மிக இளம் தாவரங்களாக முளைக்கின்றன. தண்ணீரில் ஊறும் போது, விதைகளின் வெளிப்புற அடுக்குகளை மென்மையாக்கி, பின்னர் மேலடுக்கை திறந்து முளைப்பது, ஊட்டச்சத்து மதிப்பை பல மடங்கு அதிகரிக்க உதவுகிறது. இந்த செயல்முறைதான் முளைகளை மிகவும் ஆரோக்கியமாக்குகிறது.
நீண்ட நேரம் தண்ணீரில் ஊறவைத்து முளைகட்டுவதால், விதையின் மேல்புறத்தில் உள்ள பைடிக் அமிலம் போன்ற எதிர்ப்பு ஊட்டச்சத்து காரணிகள் நீங்கி, விதையின் உள்ளே இருக்கும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் முளைமூலம் வெளி வந்து அதிக உயிர் கிடைக்கச் செய்கிறது.
முளைகட்டும் செயலானது விதையின் ஊட்டச்சத்து மதிப்பை மேம்படுத்துகிறது. இதில் செரிமானத்திற்கு உதவும், உணவை மிகவும் திறம்பட உடைக்கக்கூடிய நேரடி என்சைம்கள் நிறைந்துள்ளது. மேலும், முளைகட்டுதல், ஒரு குறிப்பிட்ட பயறு அல்லது பருப்பை எளிதில் செரிமானமாவதை எளிதாக்குகிறது.
முளைக்கும்போது தானியத்தில் இருக்கும் சில சிக்கலான கலவைகள் எளிமையான வடிவங்களாக உடைக்கப்பட்டு, தேவையற்ற பொருட்கள் செயலற்றவகைளாக மாற்றப்படுவதால், முளைவிட்ட தானியங்கள் எளிதில் செரிமானமாகின்றன.
இதனால்தான் முளைவிட்ட தானியங்கள் முன் கூட்டிய செரிமானமாக்கப்பட்ட உணவாக கருதப்படுகின்றன. சிலருக்கு புரத உணவு, நார்ச்சத்து உணவு எளிதில் செரிமானமாகாது. இவர்கள் முளைவிட்ட தானியங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் தேவையான புரதச்சத்தையும், நார்ச்சத்தையும் பெற முடியும்.
முளைகட்டிய தானியங்களின் பயன்கள்
முளைவிட்ட தானியத்தில் இருக்கும் ஃபோலேட் என்னும் நுண்ணூட்டச்சத்து, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. இதய நோய், ஆஸ்துமா, வயிற்றுப்புண், அழற்சி போன்ற நோய்களுக்கு எதிரான விளைவைக் கொண்டுள்ளது. நோய் எதிர்ப்புத்திறன், நச்சுக்கள் நீக்கும் தன்மை, ஒவ்வாமையை குறைக்கும் ஆற்றல் போன்ற சிறப்புத்தன்மைகளும் முளைவிட்ட தானியங்களுக்கு உண்டு. ஒட்டுமொத்த செல்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
எப்படி முளை கட்டச் செய்வது?
உங்களுக்கு வேண்டிய தானியத்தை முதல் நாள் இரவில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் தண்ணீரை வடித்துவிட்டு சுத்தமான காட்டன் துணியில் வைத்து கட்டி விட வேண்டும். பின் 24 மணி நேரம் கழித்து பார்த்தால் முளைகட்டிய பயறு தயாராகிவிடும்.
செரிமானம் அடைவதற்கு கொஞ்ச நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால், முளைவிட்ட பயறுகளை காலையில் சாப்பிடுவது நல்லது. சிலருக்கு வயிற்றுப் பொருமல், வயிற்று உப்பசம் ஏற்படக்கூடும் என்பதால், அவர்கள் முளைவிட்ட பயறை கொஞ்சமாக தண்ணீர் விட்டு 5 நிமிடம் வேக வைத்து சாப்பிடலாம். காலை நேர உணவுடன் ஒரு கப் முளைகட்டிய பயிறை நேரடியாகவோ, காய்கறி சாலட்டுடன் சேர்த்தோ சாப்பிடலாம். ஒரு நாளைக்கு 50 கிராம் அளவு முளைகட்டிய பயறு போதுமானது. கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.
0 comments