ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்ய வேண்டியது
ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்ய வேண்டியது
உடலுக்கு முக்கியமான தேவையாக இருப்பதும், உடல் இயக்கங்கள் அனைத்தும் சரி வர இயங்க தேவையானதுமாய் இருப்பதும் இரத்தம் தான். இந்த இரத்தம் உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்..!
ஹீமோகுளோபின். ‘ஹீம்’ என்றால் ‘இரும்பு’ என்று அர்த்தம். அது நமக்கு உணவின் மூலமாகக் கிடைக்கிறது. உணவில் இரும்புச்சத்து அதிகமாக இருந்தால், ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.
இந்த ஹீமோகுளோபின் அளவை நீங்கள் இயற்கையாகவும் மிகவும் எளிமையாகவும் தினசரி சாப்பிடும் உணவுகளின் மூலமாகவே அதிகரிக்கலாம்.
அறிகுறிகள்
உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.
ஹீமோகுளோபின் அளவு
ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.
உலர்ந்த திராட்சை
கருப்பு திராட்சை, பச்சை திராட்சை என இரண்டு வகைகள் உள்ளன. கருப்பு திராட்சை சிறந்து. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் அதிகரிக்கும்
பேரீச்சம்பழம்
பேரிச்சையில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், இரத்தம் அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியும் இதில் அதிகமாகக் கிடைக்கும்.
மாதுளைப் பழம்
குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பிச் சாப்பிடும் பழங்களில் ஒன்று, மாதுளை. இதில் சிவப்பு மாதுளை இரத்த உற்பத்தியை பெருக்கும்.
அத்திப்பழம்
உலர்ந்த நிலையில் நாட்டுமருந்து கடை மளிகை கடைகளில் கிடைக்கும், பழக்கடைகளில் பழமாக கிடைத்தாலும் வாங்கி சாப்பிடலாம் பலன் தரும்.
போலிக் அமிலம்
சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க தேவையாக இருப்பது பி-காம்ப்ளக்ஸ் வைட்டமினான ஃபோலிக் அமிலமாகும். அதனால் ஃபோலிக் அமில குறைபாடு இருந்தால், ஹீமோகுளோபின் அளவு தானாகவே குறைந்து விடும். அதனால் ஃபோலிக் அமிலம் வளமையாக உள்ள பச்சை காய்கறிகள், கீரை வகைககள், ஈரல், அரிசி சாதம், முளைத்த பயறு, காய்ந்த பீன்ஸ், கோதுமை, பாதாம், சிறு தானியங்கள், கடலை, வாழைப்பழம் மற்றும் ப்ராக்கோலி போன்ற உணவுகளை உட்கொள்ளுங்கள்.
பீட்ரூட்
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வைக்க பீட்ரூட் மிகுதியாக பரிந்துரைக்கப்படுகிறது. இரும்பு சத்து, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் இதில் வளமையாக உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.
பீட்ரூட்டை நீர் ஊற்றி வேகவைக்க வேண்டும், பீட்ரூட் நன்கு வெந்தவுடன் வடிகட்டி அந்த நீரை பருகலாம், அந்த பீட்ரூட்டை பொரியல் பண்ணி சாப்பிடலாம்.
ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் உட்கொண்டால் இயல்பான ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கலாம். ஆப்பிள்களில் இரும்புச்சத்துடன் சேர்த்து உடல்நலத்திற்கு நன்மையை அளிக்கும் பல பொருட்களை வளமையாக உள்ளது. தினமும் தோலுடன் கூடிய ஒரு ஆப்பிளை (முடிந்தால் கிரீன் ஆப்பிள்) கண்டிப்பாக உண்ணுங்கள்.
உடற்பயிற்சி
தினமும் சில உடற்பயிற்சிகளை செய்திடுங்கள். நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது, உடல் முழுவதும் தேவையான ஆக்சிஜனை அதிகரிக்க உங்கள் உடல் அதிகமான அளவில் ஹீமோகுளோபினை உற்பத்தி செய்யும்.
வைட்டமின் சி
வைட்டமின் சி குறைபாடு இருந்தாலும் ஹீமோகுளோபின் அளவு குறையும். அதனை சீர்செய்ய வைட்டமின் சி அதிகமாக உள்ள உணவுகளை உண்ணவும். வைட்டமின் சி வளமையாக உள்ள பப்பாளி, ஆரஞ்சுப் பழம், எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, குடைமிளகாய், ப்ராக்கோலி, பப்ளிமாஸ் மற்றும் தக்காளி போன்றவற்றை உண்ணவும். அதிலும் மருத்துவரை கலந்தாலோசித்த பிறகு வைட்டமின் சி அடங்கியுள்ள மாத்திரைகளையும் உண்ணலாம்.
கருப்பு சர்க்கரைப்பாகு (கருப்பட்டி)
இரத்த சோகையை எதிர்த்து போராடவும், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் இனிப்புக்கு கருப்பட்டி பயன்படுத்தலாம்.
குறிப்பு :
எந்தப் பழத்தையும் சாப்பிடுவதற்கு முன்னர் உப்புத் தண்ணீரில் ஒரு மணி நேரமாவது ஊறவைத்து, பிறகு சாதாரண நீரில் நன்றாகக் கழுவி உண்ண வேண்டும். காய்கறி மற்றும் கீரை வகைகளை சமைக்கும் முன் கால் மணி நேரமாவது உப்புத் தண்ணீரில் ஊறவைத்து, பிறகு சாதாரண நீரில் நன்றாகக் கழுவி சமைப்பது நல்லது இப்படிச் செய்வது காய் கனி மற்றும் கீரையின் மேற்புறத்தில் உள்ள பூச்சிக்கொல்லிப் படிமங்களை நீக்கிவிடும்
0 comments