தொடர் தும்மல் ஏற்பட என்ன காரணம்- தீர்வு என்ன

By sivaprakashThiru - December 19, 2020

 *தொடர் தும்மல் ஏற்பட என்ன காரணம்- தீர்வு என்ன?* 


சிலர், காலையில் எழுந்தவுடன் தொடர்ச்சியாக தும்மிக்கொண்டே இருப்பார்கள், தும்மல் தொடங்கினால் அவ்வளவு சீக்கிரம் நிற்காது.  


காற்றைத் தவிர வேறு எந்த ஒரு வெளிப்பொருளும் மூக்கில் நுழைந்தால், மூக்கு அதை ஏற்காது. உடனே ஒரு எதிர்வினையை உருவாக்கும். அந்த எதிர்வினைதான் தும்மல். இது அனிச்சையாக நடக்கும்.  உள்ளே செல்லும் பொருளை வெளியே தள்ள நடக்கும் முயற்சி அது. தூசு, துகள்கள், பாக்டீரியா என்று எது போனாலும் உடனே தும்மல் வெளிப்படும்.   


தூசு மற்றும் ஒவ்வாமை காரணமாகவே தொடர் தும்மல் ஏற்படுகிறது. ஏ.சி-க்கு கீழே அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு மூச்சுக்குழாயில் ஃபங்கஸ் (Fungus) படர்வதால் தொடர் தும்மல் ஏற்படலாம். வாகனப்புகைகளை சுவாசிப்பது, அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் மூலம் பரவும் தூசுகள், கழிவுகளிலிருந்து வெளிவரும் மாசு போன்றவை ஏற்படுத்தும் ஒவ்வாமையும் தும்மலுக்குக் காரணமாக இருக்கும்.  


அதேபோல் உடல் உறுப்புகளில் ஏற்படும் ஒவ்வாமைப் பிரச்னைகளும் (Internal Influence) தும்மல் வரக் காரணமாக இருக்கின்றன. இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். இந்த ஒவ்வாமையானது தும்மல் மட்டுமின்றி வேறு சில பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம். உதாரணமாக கண் அரிப்பு, சளி, இருமல், மூச்சுக்குழாய் மற்றும் தோலில் அரிப்பு, தோல் தடித்துக் காணப்படுதல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இப்படிப்பட்டவர்களுக்கு ஆஸ்துமா, சைனஸ், மூச்சிரைப்பு போன்ற பாதிப்புகள் இருக்க வாய்ப்புகள் அதிகம்.  


தும்மலின்போது கண் அரிப்பு, கண் வலி, மூச்சிரைப்பு அல்லது தீவிர தலைவலி போன்றவை இருந்தால், அவை சைனஸ் பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கும். இப்படிப்பட்ட சூழலில் மருத்துவரை அணுகி, எக்ஸ்-ரே எடுத்துக்கொள்ளவும். அதைத் தொடர்ந்து, `ஈஸ்னோபீலியா கௌன்ட்' (Eosinophil count) என்ற ரத்தப் பரிசோதனை செய்துபார்க்கவும். 


சளி இருமல் போன்ற பிரச்னைகளுக்கு முதல் நிலையிலேயே (Acute Illness) மருத்துவ ஆலோசனை பெறுவது, பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்க உதவும். பலர் வீட்டு மருத்துவத்திலேயே தீர்வு காண முயல்வர். சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் அதிகபட்சம் ஒருவாரம் வரை இருக்கலாம்; மூன்று நாள்களுக்குப் பிறகு பாதிப்பின் தீவிரத்தன்மை குறைய வேண்டும். அப்படியில்லாமல் `க்ரோனிக் இல்னெஸ்' (Chronic Illness) எனப்படும் தொடர் பாதிப்பு இருந்தால், நெஞ்சுச்சளி இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள மார்பு பகுதியில் எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்கவும்.  


ஒவ்வாமை காரணமாக ஏற்படும் தொடர் தும்மல், `அலெர்ஜிக் ரைனைட்டிஸ்' (Allergic Rhinitis) பாதிப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். இந்தப் பிரச்னை இருந்தால் தும்மலுடன் சேர்ந்து இருமல், கண் எரிச்சல், சளி அதிகமாகி மூக்கு ஒழுகுதல், கண்ணில் கருவளையம் தோன்றுதல், உடல் சோர்வு, கண்ணில் நீர் வடிதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே, அப்படியான அறிகுறிகள் தெரிந்தாலும் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.  


ஒவ்வாமை மற்றும் பாதிப்பின் முதல் நிலையில் இருப்பவர்கள் மட்டுமே வீட்டு மருத்துவத்தைப் பின்பற்றலாம். தொடர் சிக்கல் நீடித்தால், உங்கள் உடலுக்கு எது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்து, அந்தச் சூழலைத் தவிர்க்கவும். முடியாதபட்சத்தில், அந்தச் சூழலில் பாதுகாப்பாகச் செயல்பட வேண்டும். தூசு அலர்ஜி உள்ளவர்களுக்கு, ஒவ்வாமை எளிதில் ஏற்பட்டு தொடர் தும்மலை ஏற்படுத்தும். எனவே, அத்தகைய பிரச்னை உள்ளவர்கள் வீட்டைச் சுத்தமாகவும் தூசு சேராமலும் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். 


*எளிய வைத்தியம்*


* கண்களில் நீர்வடியும் பிரச்சனை உள்ளவர்கள் தினந்தோறும் வெறும் வயிற்றில் ஊறவைத்த 4 பாதாம் பருப்புகளை மென்று தின்றால் நீர் வடிதல், கண் சூடு, கண் எரிச்சல் ஆகியன குணமாகும்.

 

* சித்தரத்தையைச் சிறிதளவு எடுத்துப்பொடித்து, பசும்பாலில் கலந்து உட்கொண்டால் தும்மல், மூக்கில் நீர்வடிதல் குணமாகும். 


* பூண்டுத் தோல், மிளகு, ஓமம், ஆகியவற்றை இடித்து நெருப்பு அனலில் இட்டுப்புகையைப் பிடித்தால் மூக்கடைப்பு மூக்கில் நீர்வடிதல் முதலிய நோய்கள் குணமாகும். 


* 1 ஸ்பூன் தேனில் சிறிது மிளகுத் தூள்  கலந்து ஒரு நாளைக்கு 2-3 முறை சாப்பிட்டு வந்தால், தும்மல் பிரச்சனை நீங்கும். 


* எலுமிச்சை ஜூஸில் தேன் கலந்து குடித்தால் மூக்கில் ஏற்படும் அரிப்பில் இருந்து விடுவிக்க உதவும். 


* இஞ்சியை பொடியாக நறுக்கி, கொதிக்கும் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் கலந்து குடிக்க வேண்டும். அப்படி தினமும் குடித்து வந்தால்,  தொற்றுக்களால் ஏற்படும் தும்மலில் இருந்தும் விடுபடலாம். 


* நான்கு கப் தண்ணீரில் சிறுதுண்டு இஞ்சி, இலவங்கப்பட்டை சிறுதுண்டு  நட்சத்திர சோம்பு 2 மூன்றையும் போட்டு கால் கப் ஆகும் வரை நன்றாகக் கொதிக்கவைத்து 2 மேசைக்கரண்டி தேன், பாதி எலுமிச்சம் பழத்தையும் அத்துடன் பிழிந்து அருந்த ஜலதோஷத்தைப் போக்கக் கூடிய அற்புதமான நிவாரணியாக இருக்கும்.  


* ஒரு தம்ளர் பசும்பாலை அடுப்பில் வைத்து காய்ச்சி பால் பொங்கியதும் அடுப்பை மிதமான சூட்டில்(Sim) வைத்து, பாலில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் இலவங்க பட்டை தூள், சின்ன இஞ்சி துண்டை நசுக்கி போட்டு, அரை டீஸ்பூன் மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் அடுப்பை எரிய வைத்து அடுப்பை அணைத்து சூடு சற்றே ஆறியதும் வடிகட்டி தேவைக்கு ஏற்ப தேன் அல்லது பனங்கற்கண்டு தூள் சேர்த்து பருகலாம். தும்மல், மூக்கு ஒழுகுதல், கண் சூடு, ஒவ்வாமை தீரும். 


* ஒரு தம்ளர் தண்ணீரில் மஞ்சள் தூள், மிளகு போட்டு கொதிக்க வைத்து குடிக்கும் பதச்சூடு வந்தவுடன் வடிகட்டி அருந்த ஒவ்வாமை தன்மை, மூக்கில் நீர் வடிதல், தொடர் தும்மல் தீரும். 


ஏதாவது ஒரு எளிய மருத்துவ முறையை பயன்படுத்தி பயனடையவும்.



  • Share:

You Might Also Like

0 comments