*சைனஸ் தொல்லையா? கவலை இல்லை!*
சைனஸ் பிரச்சனையை கவனிக்காமல் விட்டால், மூக்கின் இரண்டு பக்கங்களிலும் உள்ள சிற்றறைகளில் தேங்கிய நீர், மூளை வரை சென்று, மூளைக் காய்ச்சல் வர வாய்ப்பு ஏற்பட்டு விடும். வீடுகளில், மின் விசிறிகளில், குளிர்சாதன இயந்திரங்களில், துாசி தேங்காமல் பார்த்துக் கொண்டால், மூக்கில் ஒவ்வாமை ஏற்படாமல் சைனசிலிருந்து தப்பிக்கலாம்
*சைனஸ் என்றால் என்ன?*
நம் மூக்கைச் சுற்றி, எலும்புகளில் துளைகள் உள்ளன. இவற்றை, சைனஸ் அறைகள் என்கிறோம். புருவத்தின் மேல் நெற்றியில், 'பிரன்டனல்' என்ற அறைகளும், சற்று கீழே, 'எத்மாய்டு' அறைகளும், மூக்கின் இருபுறமும் கன்னத்தில், 'மேக்சிலரி' என்ற, சிற்றறைகளும் உள்ளன. இந்த சிற்றறைகள், காற்றால் நிரப்பப்பட்டிருக்கும். இவற்றின் ஏதாவது ஒரு அறையில், நீர் அல்லது சளி தங்கிய பின், சில காரணங்களால், அந்த அறை வாசல் அடைத்துக் கொள்வதால், சைனஸ் பாதிப்பு ஏற்படுகிறது.
*அறிகுறிகள்*
தலை பாரமாக இருத்தல், மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், அதிக தும்மல், தலைவலி ஆகியவை முக்கிய அறிகுறிகள்; முற்றிய நிலையில் தொண்டை வலியும் இருக்கும்.
*மூக்கடைப்பு ஏற்படும்*
சிற்றறைகளில் இருந்து வெளியே வர வேண்டிய நீர், சளியாக மாறி, கட்டியாக அடைத்துக் கொள்வதால், மூக்கடைப்பு, மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. ஒரு வாரம், மருந்து, மாத்திரை சாப்பிட்டால், சரியாகி விடும்.
*சளி தானே என விடுவது ஆபத்தா?*
அலட்சியமாக விட்டால் மூச்சுத் திணறலால் அவதிப்பட வேண்டி வரும். தொற்று பாதிப்புகள் வரவும் வாய்ப்புண்டு. நெற்றி சிற்றறைகளில் சேர்ந்த நீர், மூளை வரை சென்று, மூளைக் காய்ச்சல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஒரு கட்டத்தில், உயிரிழப்புக்கும் இது காரணமாகி விடும்; இதில், கவனமாக இருப்பது நல்லது.
*சுயமருத்துவம் நல்லதா?*
சளி பிரச்னைக்கு, மருந்து கடைகளில், மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிடலாம்; ஒரு வாரத்தில் சரியாகவில்லை என்றால் மருத்துவ நிபுணரின் ஆலோசனை பெறுவது அவசியம்.
*முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?*
வீடுகளை, தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மின் விசிறிகளில் துாசி படிவது; நாய், பூனை உள்ளிட்ட வீட்டு செல்லப் பிராணிகள் எச்சம் மற்றும் முடி இரைந்து கிடப்பது, குளிர்சாதன இயந்திர, 'பில்டரில்' துாசி படிதல் ஆகியவற்றால், பிரச்னை ஏற்படும். குளிர்சாதன இயந்திரத்தை, வாரத்திற்கு ஒரு முறை, சுத்தம் செய்ய வேண்டும். பெரிய அலுவலகங்களில், 'சென்ட்ரலைஸ்டு ஏசி' உள்ளது. இவற்றில், நிறைய துாசி படியும். இதை ஆண்டுக்கணக்கில் சுத்தம் செய்யாமல் விட்டு விடுவதால், சைனஸ் பிரச்னை வர வாய்ப்புள்ளது. மேலும், அலுவலகத்தில் உள்ள ஒருவர், அலர்ஜியால் பாதிக்கப்பட்டு தும்மினாலும், அதன் பாதிப்பு, அலுவலகத்தில் உள்ள எல்லாரையும் தொற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது. இது, நிறுவனத்தின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதால், நிறுவனங்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும்.
*வீடுகளை சுத்தம் செய்வதில் சிறப்புக் கவனம் தேவை*
வீடுகளை வெறுமனே பெருக்கி சுத்தம் செய்து விட்டோம் என, இருப்பது சரியல்ல. தண்ணீரால், தினமும் தரையைத் துடைக்க வேண்டும். சிலருக்கு காட்டன் மெத்தை, தலையணை, அலர்ஜியை ஏற்படுத்தும். அத்தகைய வீடுகளில், 'போம்' வகையிலான மெத்தை, தலையணையை பயன்படுத்துவது நல்லது.
*குழந்தைகளுக்கான பாதிப்பு*
குழந்தைகள், தரமற்ற ஐஸ்கிரீம் சாப்பிடுதல், காய்ச்சி வடிகட்டிய தண்ணீர் குடிக்காமல், சாதாரணமாக தண்ணீர் குடிப்பது, குளிர்பதன பெட்டிகளில் சரியாக அளவில் பாதுகாக்காத, 'ஐஸ்கிரீம்' சாப்பிடுவதால், சைனஸ் பாதிப்பு வரும். இதில், பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு
தொண்டை தசை (டான்சில்) வளரும்போது, மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். மூக்கு, தொண்டைக்கு மேல் உள்ள, 'அடினாய்டு' அடைப்பு ஏற்படுவதால் பாதிப்பு வரும். இதற்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்
*பனிக் காலங்களில் பாதிப்பு*
பனிப் பொழிவு அதிகம் உள்ள பகுதிகள், மலை பிரதேசங்களில், அலர்ஜி பாதிப்பு அதிகம் வரும். மலர்களில் உள்ள, மகரந்த துகள்கள், இதற்கு காரணமாக அமையும். காது, மூக்கு, தொண்டைக்கும் தொடர்புண்டு. இதனால், ஒன்றில் ஏதாவது பாதிப்பு வந்தாலும், அடுத்தடுத்த பகுதிகளையும் பாதிக்கும். தும்மல், சளிதானே என, மக்கள் அலட்சியமாக இருப்பதை கைவிட வேண்டும்.
*சளிக்கான சிறப்பான வைத்தியம்*
ஒரு கைப்பிடி தூதுவளை,
ஒரு கைப்பிடி துளசி,
ஒரு வெற்றிலையுடன் ஒரு சிறிய துண்டு சுக்கு,
அரை டீஸ்பூன் மிளகு,
ஒரு டீஸ்பூன் முழு மல்லி சேர்க்கவும் (திப்பிலி இருந்தால் அரை டீஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம்).
இவை அனைத்தையும் இரண்டு டம்ப்ளர் தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும். இதில், பெரியவர்கள் ஒரு டம்ளர், 15 வயது வரையுள்ள குழந்தைகள் அரை டம்ளர், 8 வயதுக்குக் கீழான குழந்தைகள் 10 மிலி என, 15 நாள்களுக்கு ஒருமுறை பருகி வரவும். நாள்பட்ட சளியையும் வெளியேற்றிவிடும். மேலும், நுரையீரலை பலப்படுத்தி சளி தங்காமல் காக்கும்.
* தக்காளி, மிளகு, பூண்டு ரசம் வைத்து சூடாக அடிக்கடி குடிக்கலாம்.
* குப்பை மேனி இலையை அரைத்து சாறு எடுத்து அதில் ஒவ்வொரு சொட்டு இரண்டு மூக்கு துவாரங்களில் விட்டால் முக்கடைப்பு, தலைபாரம் தீரும்.
* ஒரு கைப்பிடி குப்பைமேனியை எடுத்து அலசி, அதோடு 4 மிளகு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து சாறு எடுக்கவும். இதை மூன்று நாள்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரவும். இதைக் குடித்த பின்னர் நிச்சயம் வாந்தி வரும் பயப்பட வேண்டாம் அது சளி வெளியேற்றமே. மேலும், குப்பைமேனியால் குப்பையான மேனியும் அழகுபெறும். பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் வராமல் காக்கும்.
* இஞ்சி, பூண்டு, மிளகு, துளசி, ஏலக்காய் போன்றவற்றை தட்டிப்போட்டு அத்துடன் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டால் சளி, தொண்டை வலிக்கு இதமாக இருக்கும். முருங்கைக்கீரை பொறியல் அல்லது சூப் வைத்து சாப்பிடலாம்.
*முருங்கை இலை சூப்*
*தேவையான பொருட்கள்*
முருங்கை இலை - 2 கப்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
பூண்டு - 4 (அ) 5 (பெரிய பல்)
மிளகு - ½ டீஸ்பூன்
சீரகம் - ½ டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
மல்லித் தழை - 1 கைப்பிடி.
*செய்முறை*
முருங்கை இலையை (பழுப்பு இலை இல்லாமல்) ஆய்ந்து நன்கு கழுவி அத்துடன் சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, சீரகம், மிளகு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வேக வைத்து, இறக்கிவைக்கவும். பின், சூடு ஆறிய பிறகு, அதை மிக்ஸியில் அரைத்து, தேவைப்பட்டால் தண்ணீர் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து ஒரு கொதி கொதிக்க வைத்து மல்லித்தழை தூவி சூடாக குடிக்கலாம்.
இது சளி, தொண்டை கரகரப்புக்கு நல்ல இதமாக இருக்கும். மிளகு, பூண்டு, வெங்காயம், தக்காளி அனைத்துமே நல்ல நோயெதிர்ப்பு பொருட்கள்.
சிறியவர்களுக்கும், முதியவர்களுக்கும் இந்த சூப் செய்து சளிபிடித்த நாட்களில் கொடுத்துவர அவர்களின் உடலில் நோயெதிர்ப்புத் திறனை மேலும் வலுவடையச் செய்யலாம்.
அதேபோல, உணவும் மருந்தும் ஒருபுறம் இருக்க, நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதும் அவசியம். அதற்கு, மூச்சுப் பயிற்சி நல்ல பலனைக் கொடுக்கும்.
0 comments