கருவுற்றபோது கவனிக்க வேண்டியவை
- உணவு
- செக் அப்
- பல் பரிசோதனை
- உடை
- தோல் பராமரிப்பு
- பொதுவான அறிவுரைகள்
- ரூபெல்லா தடுப்பு ஊசி
உணவு
கருவுற்ற பெண் மூன்று ‘G’ நிறைய சாப்பிட வேண்டும்.
- Green leaves – கீரை வகைகள்
- Green vegetables – பச்சைக் காய்கறிகள்
- Grains – முழு தானியங்கள்
- முழு தானியங்கள் என்றால் அதிகம் பாலிஷ் போடாத கோதுமை மற்றும் அரிசி சாதம், கஞ்சி போன்றவை நல்லது. புழுங்கலரிசி உபயோகிப்பது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மல்லிகைப் பூ போன்ற பச்சரிசி சாதம், சத்தில்லாத சக்கைதான். அதிக refine செய்யப்பட்ட ஆட்டா, மைதா போன்றவற்றில் இயற்கையான நார்ச்சத்து இருக்காது.
- அதிக காரம், மசாலா பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. கருவுற்ற தாய் நிறையப் பழங்கள் சாப்பிட வேண்டும். இது மலச்சிக்கலைத் தவிர்க்கும். அன்னாசி, பப்பாளி போன்றவை உடலுக்கு நல்லது. அவை சினிமாவிலும் டிவி மொகா தொடர்களிலும்தான் அபார்ஷனை ஏற்படுத்தும்.
- தினமும் அரை லிட்டர் அளவு பால் குடிப்பது கருவில் உள்ள குழந்தையின் எலும்புகளுக்கு கால்ஷிய சத்தை சேர்த்து அவற்றை உறுதிப்படுத்தும். கருவுற்ற முதல் சில மாதங்களுக்கு வாந்தி, மயக்கம் இருக்கலாம். சிலருக்கு அதிகமாக இருக்கும். அச்சமயம் பழ ஜூஸ், வேகவைத்த காய்கறிகள், கஞ்சி வகைகளை அடிக்கடி சாப்பிடலாம்.
- கருவுற்ற தாய்க்கு நாக்கில் ருசி மாறும். அதனால்தான் சாம்பல் ருசிக்கிறது. மனத்துக்குப் பிடித்த உணவுகளை வீட்டிலேயே தயாரித்துச் சாப்பிடலாம். எள் உருண்டை, கடலை உருண்டை, பொட்டுக் கடலை உருண்டை போன்றவற்றில் உள்ள வெல்லம் இரும்புச் சத்தை தரும். கடலை, எள்ளு ஆகியவற்றில் உடலுக்கு மிகவும் தேவையான கொழுப்பு அமிலங்கள் (Essential Fatty Acids) உள்ளன. எள், கருச்சிதைவை ஏற்படுத்தாது.
செக் அப்
- கருவுற்ற ஒன்பது மாதங்களை மருத்துவரீதியாக மூன்று பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். மூன்று மாதங்கள் கொண்ட ஒரு பிரிவு ஒரு Trimester என்று அழைக்கப்படுகிறது. மூன்று Trimester-களிலும் குறைந்தபட்சம் ஒரு முறையாவது மருத்துவரிடம் சென்று பரிசோதனை மற்றும் ஆலோசனை பெறுவது அவசியம்.
- முதல் Trimester-ல் தாய் கருவுற்று இருப்பதை உறுதி செய்து, தாய்க்கு பொதுவாக மருத்துவப் பரிசோதனை செய்து, வேறு ஏதேனும் நோய் இருக்கிறதா என்று பார்க்கப்படும். தாய்க்கு HIV, B வகை மஞ்சள் காமாலை, ரத்த குரூப் மற்றும் Rh வகை, ரத்த சோகை கண்டறிய சோதனைகள் செய்யப்படும்.
- இரண்டாவது Trimester-ல் தாய்க்கு ரண ஜன்னி தடுப்பு ஊசி (Tetanus Tozoid T.T) போடப்பட்டு, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் எடுத்து குழந்தை வளர்ச்சி, உறுப்புகள், நஞ்சுக் கொடி சரியாக இருக்கிறதா என்று பார்க்கப்படும். தாய்க்கு சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, ரத்த சோகை, உப்பு நீர் இருக்கிறதா என்று பார்க்கப்படும்.
- மூன்றாவது Trimester-ல் குழந்தையின் வளர்ச்சி, தாய்க்கு ஏதாவது நோய்கள் போன்றவற்றைப் பார்ப்பதுடன், பிரசவம் எங்கு, எப்போது, எப்படி, நார்மல் டெலிவரி (சுகப்பிரசவம்) ஆகுமா, ஏதாவது சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பவை நிர்ணயிக்கப்படும். இரண்டாவது டிடி தடுப்பு ஊசியும் போடப்படும்.
- தாய் தனக்கு வேண்டிய உணவைக் கட்டாயம் சாப்பிட வேண்டும். குழந்தை வளர்ந்து பெரிதாகும்போது, தாயின் வயிறும் அதற்கேற்ப பெரிதாகும். அந்தச் சமயத்தில் அதிகமாகச் சாப்பிட்டால் சிலருக்கு சிரமமாக இருக்கும். மூச்சு வாங்கும். இத்தகைய பிரச்னை இருப்பவர்கள், சாப்பாட்டின் அளவைக் குறைத்து, மூன்று வேளையை நான்கு வேளையாகச் சாப்பிடலாம்.
- வயிறு நிறையச் சாப்பிட்டால் குழந்தை எடை அதிகமாகும். பிரசவம் சிக்கலாகிவிடும் என்பதெல்லாம் தவறான எண்ணங்கள்!
- தாய்க்கு ரத்த அழுத்தம் அல்லது சர்க்கரை நோய் இருந்தால் உப்பு, கொழுப்பு, சர்க்கரையைக் குறைக்கச் சொல்லி தேவையான உணவுமுறையை மருத்துவர் சொல்வார். அதன்படி கவனமாக உணவு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய்க்கான மாத்திரைகள் ஒருநாள்கூட தவறாமல், மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும்.
- தாய்க்கு ரத்தசோகை இருந்தால், குழந்தை குறை மாதமாக, எடை குறைவாக இருக்கக்கூடும். எனவே, இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் மாத்திரை (Iron Folic Acid Tablet) 3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. கருவுற்ற சில தாய்மார்களுக்கு கால்ஷியம் மாத்திரைகள் தேவை. ஃபோலிக் அமில மாத்திரைகளைச் சாப்பிடுவதால், பிறக்கும் குழந்தைக்கு நரம்பு மண்டல குறைபாடுகளைத் தவிர்க்கலாம்.
- கருவுற்ற தாய், முதல் இரண்டு மூன்று மாதங்களுக்கு அநாவசியமான மருந்து மாத்திரைகளைச் சாப்பிடுவது கூடாது. தேவையில்லாமல் நிறைய மாத்திரைகளைச் சாப்பிடுவது ஆபத்தானது. சில மாத்திரைகள் குழந்தைக்கு உடல் ஊனம் உண்டாக்கும் தன்மை உடையது. குறிப்பாக, கருவுற்ற முதல் இரண்டு மூன்று மாதங்களில் இருக்கும் வாந்தி மயக்கத்துக்கு மாத்திரைகள் அதிகம் சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
பல் பரிசோதனை
பல்லில் ஏதாவது பிரச்னை இருந்தால் கருவுருவதற்கு முன்பே சரி செய்துகொள்ள வேண்டும். அவசியம் ஏற்பட்டால் இரண்டாவது Trimester-ல் செய்துகொள்ளலாம்.
உடை
- நல்ல லூசான காற்றோட்டமான துணிமணிகள் தேவை. அதுவும் மார்பகப் பகுதியிலும் இடுப்பிலும் இறுக்கம் தரும் உடைகள் கூடாது.
- சாதாரணமாகவே ஹை ஹீல்ஸ் செருப்பு போடுவதால் இடுப்பு வலியும், முதுகு வலியும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கர்ப்பமாக இருக்கும்போது கட்டாயம் சாதாரண செருப்புதான் போட வேண்டும். அதுவும் கொஞ்சம் பெரிய சைஸ் போடுவது நல்லது. கால் வீக்கம் வராது.
தோல் பராமரிப்பு
- கருவுற்ற தாயின் தோல் வறண்டு அல்லது அதிக எண்ணெய்ப் பசையாக மாறலாம். இதற்குத் தேவையான மாய்ஸ்ட்சரைஸர்கள் அல்லது லோஷன் பயன்படுத்தலாம். சாதாரண தேங்காய் எண்ணெய் மிகவும் நல்லது. நிறைய கெமிக்கல் அடங்கிய மேல் பூச்சுகளைத் தவிர்ப்பது நல்லது. அவற்றால் ஒவ்வாமை ஏற்பட்டு, அதற்கு சிகிச்சை எடுக்கவேண்டி வந்தால் வீணான மன உளைச்சல்தானே! சிலருக்கு தோலில் ஏற்படும் மாற்றங்கள் பிரசவம் ஆன பிறகு தானாக சரியாகிவிடும். ஹார்மோன் மாறுதல்களாலும் தோலில் பாதிப்புகள் ஏற்படலாம்.
- தினமும் குளிப்பது மிக மிக முக்கியம். தண்ணீர் கிடைத்தால் தினம் இரண்டு முறை! தன் சுத்தம் பேணுதல், தோல் நோய்கள் வராமல் பாதுகாக்கும். புத்துணர்ச்சியையும் தரும்.
- அந்தக் காலத்தில் விசாலமான வீடு, முற்றம், கொல்லை என்று நல்ல காற்றோட்ட வசதி இருந்தது. வெந்நீர் போட வீட்டுக்கு வெளியில் அடுப்பு இருக்கும். அதிலிருந்து வரும் புகை வீட்டுக்குள் அதிகம் வராது. யாருக்கும் பாதிப்பு இருக்காது. இந்தச் சின்ன வீட்டில் புகைமூட்டம் இருந்தால் எல்லோருக்கும் சுவாசக் கோளாறு வரும் அதிலும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அதிகப் பாதிப்பு இருக்கும்
பொதுவான அறிவுரைகள்
- மகப்பேறு என்பது மகிழ்ச்சியான, உன்னதமான அனுபவம். அதை கணவன், மனைவி மற்ற உறவினர்கள் யாவரும் அனுபவிக்க வேண்டும்.
- மனைவியின் உடல் எடை கூடுவது, முகம் வெளுப்பது, மார்பகம் பெரிதாவது, இடுப்புப் பகுதி பெருப்பது போன்றவை கர்ப்பக் காலத்தில் ஏற்படும் சாதாரண மாற்றங்கள். இதனை சுமையாக எண்ணி பயந்துவிடக்கூடாது. வீட்டில் உள்ள அம்மா, மாமியார், அத்தை, பாட்டி போன்றோர் இதுபற்றிய விவரங்களை கர்ப்பிணிக்கு எடுத்துச் சொல்லி, அவள் மனத்தில் உள்ள பயத்தைப் போக்க வேண்டும்.
- அதேபோல, மருத்துவரிடம் செக்கப்புக்குச் செல்லும்போது தனக்குள்ள பிரச்னைகளை சந்தேகங்களை விவரமாக எடுத்துச் சொல்லி சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். மருத்துவரும் பொறுமையுடன் தாயின் பயத்தைப் போக்கி, பேறுகாலத்தை தைரியத்துடன் எதிர் நோக்கத் தயார் செய்ய வேண்டும்.
- மனைவியின் மாறும் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஆதரவாகக் கணவன் நடந்துகொள்ள வேண்டும். கருவுற்ற பெண் அடிக்கடி கோபம் கொள்வது, எரிச்சல்படுவது, காரணம் இல்லாமல் அழுவது, அதிக உணர்ச்சி வசப்படுவது இயற்கையே! இந்த மாறுபட்ட நடவடிக்கைகளுக்குக் கணவன், அம்மா, மாமியார், உறவினர்கள் எல்லோரும் அவளோடு ஒத்துப்போய் உதவ வேண்டும். கர்ப்பிணி, சாதாரண மனநிலையில் இருக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தித் தர வேண்டும்.
- குமட்டல், வாந்தி, இடுப்பு, முதுகு, அடி வயிற்றுப் பகுதியில் வலி, மலச்சிக்கல், கால் குடைச்சல் போன்றவை இயற்கையாகும்
- குமட்டல், வாந்தி குறைய, காலையில் அதிக நேரம் வெறும் வயிற்றோடு இருப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிகம் தண்ணீர் ஆகாரம் எடுத்துக்கொள்வது, மனத்துக்குப் பிடித்ததை சாப்பிடுவது நல்லது. அதிகமான புளிப்புச் சுவை, கொழுப்புச் சத்துள்ள உணவுகளைத் தவிர்க்கலாம்.
- பாதுகாப்பான உடற்பயிற்சி தேவை. படுக்கும்போது ஒரே பக்கமாக அதிக நேரம் படுக்காமல், கை கால்களை அடிக்கடி நீட்டி மடக்கிவிடுவதால் முதுகு வலி, கை கால் வலி இருக்காது. வலி மாத்திரைகள் அதிகம் சாப்பிடக்கூடாது
- கால் பாதம் லேசாக வீங்கும். அதைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. விரிந்து வரும் கருப்பையால், கால்களுக்குச் செல்லும் ரத்தக் குழாய்கள் அழுத்தப்பட்டு, நிணநீர் சரியாக மேலேறி வடியாததால் கால் வீக்கம் வரலாம். காலை நீண்ட நேரம் தொங்கப்போடாமல் இருக்கலாம். உட்காரும்போதோ படுக்கும்போதோ கால்களைச் சற்றே உயரமாக வைத்துக்கொண்டால் இந்த வீக்கம் வடிந்துவிடும். நாளாக நாளாக வீக்கம் அதிகமாகி உடல் பூராவும் வீக்கம் இருந்தால், மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை தேவைப்படும்.
ரூபெல்லா தடுப்பு ஊசி
- சாதாரணமாக, இந்த ரூபெல்லா தடுப்பு ஊசியை பெண் குழந்தைகளுக்கு 10 வயது முடிந்தவுடன் போட்டுவிடுவது நல்லது. அப்படிப் போடாவிட்டால், கருவுருவதற்கு 3 மாதத்துக்கு முன்னால் இந்தத் தடுப்பு ஊசி போட்டுக்கொள்வது முக்கியம். இந்த நோய், கருவில் உள்ள குழந்தையை மிகவும் பாதித்து, இதய நோய், காது கேளாமை, கண்களில் கேடராக்ட், மூளை வளர்ச்சி குறைபாடுகளை உண்டாக்கிவிடும்.
- பொதுவாக, கருவுற்ற தாய் நீண்ட தூரம் பயணம் செய்வதைத் தவிர்த்துக்கொள்வது நல்லது. மிகவும் உணர்ச்சிபூர்வமான விஷயங்களை மனதில் போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் இருக்க வேண்டும். உடலுறவு மென்மையாக இருக்க வேண்டும். தடுப்பு ஊசிகளை தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி லேசான உடற்பயிற்சி செய்வது நல்லது. இது உடல், மனம் இரண்டும் புத்துணர்ச்சியோடு இருக்க உதவும்.
- கருவுற்ற காலத்தில் மனத்தில் ஆத்திரம், காழ்ப்புணர்ச்சி, பிடிவாதம், பழி வாங்க நினைப்பது போன்ற எதிர்மறை உணர்வுகளைத் தவிர்க்க வேண்டும். கொடூரமான வன்முறைக் காட்சிகள் கொண்ட சினிமா, டிவி நிகழ்ச்சி ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இது கருவில் வளரும் குழந்தையின் மன உணர்வுகளைப் பாதிக்கும். ஓய்வு நேரத்தில் மென்மையான இசை கேட்கலாம். அதிக சத்தத்துடன் கூடிய இசையைக் கேட்பது கூடாது. நல்ல புத்தகங்களைப் படிக்கலாம். ஆன்மிகம் சம்பந்தமான புத்தகங்களைப் படிப்பது நல்லது.
- இனிமையான நினைவுகள், அமைதியான மனம், நிறைந்த உள்ளம், வன்முறையற்ற டிவி நிகிழ்ச்சிகள், மனத்தை வருடும் மெல்லிசை, தியானம், இறை வணக்கம் நல்லது.
- கருவுற்ற தாயின் வீட்டு வேலைகளை மற்றவர்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும். மிகவும் கடினமான வேலைகளைத் தவிர்க்க வேண்டும். வேலை ஏதும் செய்யாமல் இருப்பதும் நல்லதல்ல. சதாகாலமும் ஓய்வெடுத்துக்கொண்டிருப்பதும் வேண்டாம். இது கெட்டப்பழக்கம் மட்டுமல்லாது, உடலுக்கு நோயை வரவழைக்கும். சுறுசுறுப்பாக தன்னால்முடிந்த வேலைகளைச் செய்வதால், பேறு காலத்தில் சிரமம் இருக்காது; பிரச்னை இருக்காது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
- கருவுற்ற 18 வாரங்களில் குழந்தை உதைப்பது, முண்டுவதை தாய் உணர வேண்டும். இல்லாவிடில், உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும்.
- பிறந்தவுடன் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட ஏதுவாக மார்புக் காம்புகளைத் தயார் செய்ய வேண்டும். அவை உள்ளடங்கி இருந்தால், மருத்துவரின் ஆலோசனையுடன் அதைச் சரிப்படுத்த தேவையான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
- இப்படிப் பல கோணங்களிலிருந்தும் தாய்மையைப் புரிந்துகொண்டு திட்டமிட்டுச் செயல்பட்டால், குடும்பத்தின் வாரிசை மகிழ்ச்சியோடு பெற்றெடுக்கலாம்.
Thanks to link
0 comments